ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா மருத்துவமனையாக மீண்டும் மாற்றம்

ஈரோடு, ஏப். 17:   ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மீண்டும் கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பெருந்துறையில் செயல்பட்டு வரும் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கைகள் உள்ளன. தொடக்கத்தில் சாலை மற்றும் போக்குவரத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், சுகாதாரத்துறையின் கீழ் மருத்துவக்கல்லூரி கொண்டுவரப்பட்ட பிறகு அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளும் அளவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிறப்பு பிரிவு டாக்டர்கள் நியமிக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு கொரோனா பரவல் தொடங்கியதும், இம்மருத்துவக்கல்லூரி கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் வகையில், கொரோனா தொற்று சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்களும் பொருத்தப்பட்டன. குறிப்பாக 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் புதியதாக பொருத்தப்பட்டது.

இதனால் நோயாளிகளுக்கு தேவையான அளவு அழுத்தத்தில் ஆக்சிஜன் தடையின்றி வழங்க முடியும்.   இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல குறைந்து வந்ததையடுத்து கொரோனா சிறப்பு மருத்துவமனை என்ற நிலையில் இருந்து மாற்றி, அனைத்து வகை நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் கொரோனா தொற்று சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்கிரீனிங் சென்டர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு கடும் பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளை மட்டும் ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ப்பது என்றும், ஓரளவு நல்ல நிலையில் உள்ள நோயாளிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Related Stories: