கொரோனா இல்லாத முன்மாதிரி கிராமம் உருவாக்குவோம் பழநி அருகே கிராமத்தை தத்தெடுத்து விழிப்புணர்வு

பழநி, ஏப். 15: கொரோனா இல்லாத பகுதியை உருவாக்குவதற்காக பழநி அருகே கோபாலபுரம் கிராமத்தை தத்தெடுத்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா 2வது அலை தமிழகத்தில் வேகமெடுத்துள்ளது. இதனால் சமூக விலகல், முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ கோபாலபுரம் பகுதியை கொரோனா இல்லா ஏரியாவை உருவாக்குவோம் எனும் பெயரில் தத்தெடுத்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பழநி டிஎஸ்பி சிவா தலைமை வகிக்க,  ஊராட்சி தலைவர் சுஜாதா வேணுகோபால், பழநியாண்டவர் மகளிர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். பழநி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர்.மகேந்திரன் கொரோனா பரவும் முறை, தவிர்க்கும் வழிமுறைகள், சுகாதார கடைபிடிப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு மூலிகை பல்பொடி, ஆர்சனிக் ஆல்பம் 30சி, கபசுரக் குடிநீர், முருங்கை சூப், முகக்கவசம் வழங்கினார். இப்பகுதி குடியிருப்புகளை வாரம் ஒருமுறை ஆய்வு செய்து சமையலறை, கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு பரிசுகள் வழங்கப்படுமென கூறப்பட்டது. தொடர்ந்து குடியிருப்புவாசிகள், முக்கிய பிரமுகர்கள் கொரோனா எதிர்ப்பு உறுதிமொழிகள் எடுத்தனர்.

Related Stories: