வேடசந்தூர் அருகே டூவீலர் மீது கார் மோதி இளம் தம்பதி பலி: குழந்தை படுகாயம் உடல்களை வாங்க மறுத்ததால் பரபரப்பு

வேடசந்தூர், ஏப். 15: வேடசந்தூர் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இளம் தம்பதி பலியாக, குழந்தை படுகாயமடைந்தது. வேடசந்தூர் அருகே கொன்னாம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (எ) சிக்கனன் (30). மில்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மல்லிகா (25). மகள் வீரதிம்மு (4) ஆகியோருடன் வேடசந்தூர் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். தம்மனம்பட்டி அருகே வந்த போது அவ்வழியே கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் சதீஷ்குமார், மல்லிகா, வீரதிம்மு ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.  3 பேரையும் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது சதீஷ்குமார், மல்லிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீரதிம்முவை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் பிரேத பரிசோதனை முடிந்து சதீஷ்குமார், மல்லிகா உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது உறவினர்கள், நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் சாலை இல்லாததினாலே தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் சர்வீஸ் சாலை அமைப்பதாக கூறுவதோடு சரி அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும், அப்போதுதான் உடல்களை வாங்கி செல்வோம் என கூறி போராட்டம் நடத்தினர். தகவலறிந்ததும் டிஎஸ்பி மகேஸ் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சர்வீஸ் சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பின்பே உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு உடல்களை பெற்று சென்றனர்.

Related Stories: