சித்திரை பிறப்பையொட்டி கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பழநி, ஏப். 15: தமிழகம் முழுவதும் நேற்று சித்திரை முதல் நாளான தமிழ் வருட பிறப்பு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனால் கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து தரிசனம் செய்தனர். பழநி: பழநி கோயிலில் நேற்று காலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்ரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து சாமி முன்பு நாட்காட்டி வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலசந்தி, சிறுகாலசந்தி, உச்சிகாலபூஜை, சாயரட்சை,  ராக்காலம் என 6 வகை பூஜைகள் நடந்தது. மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட வரிசையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வின்ச், ரோப்கார் நிலையங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். இதுபோல் திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மலைக்கோயில் ஆனந்த விநாயருக்கு வெள்ளிக்கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசித்தனர். இதேபோல் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயில், அசோக்நகர் பகவதி அம்மன் கோயிலும் விஷேச வழிபாடுகள் நடந்தன. திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில், எம்விஎம் நகர் பெருமாள் கோயில், கேஆர் நகர் ரூப கிருஷ்ணன் கோயி்ல், ஓஎம்ஆர்பட்டி கிருஷ்ணன் கோயிலிலும் தமிழ் வருட பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சின்னாளபட்டி:  சின்னாளபட்டி மேட்டுபட்டியில் உள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் 17வது ஆண்டாக சுவாமிக்கு 10 ஆயிரத்து 8 பழங்களை கொண்டு ஓம் எனும் வடிவத்தில் வெண்ணை காப்புடன் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். கோயில் தலைமை குருக்கள் சுந்தரராஜா பட்டாட்சாரியார் தலைமையில் சுமார் 72 மணிநேரம் இந்த அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள், சின்னாளபட்டி லெட்சுமி நாராயண பெருமாள், சிவசுப்பிரமணியர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  இதேபோல் பொதுமக்கள் தமிழ் வருட பிறப்பையொட்டி தங்களது வீடுகளை சுத்தம் செய்து, சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

Related Stories: