எல்இடி பல்புகளால் தடுமாறும் வாகனஓட்டிகள் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

திண்டுக்கல் ஏப். 15: திண்டுக்கல் பகுதிகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் எல்இடி பல்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாகனஓட்டிகள் தடுமாறி விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் ஏராளமானவை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த வாகனங்களில் வெள்ளை நிற ஒளி வரும் எல்இடி பல்புகளின் புழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த பல்புகளின் வெளிச்சம் கண்களை கூசுவதுடன், எதிரே வரும் வாகனஓட்டிகள் செல்ல முடியாமல் தடுமாற வேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது இருசக்கர வாகனங்களின் ஹெட்லைட்டுகளிலும் இந்த எல்இடி பல்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சாலைகள், தெருக்களில் எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுனர்கள் கண்கள் கூசி பார்க்க முடியாததால் வழிதெரியாமல், அவ்வழியில் செல்லும் மற்ற வாகனஓட்டிகள், பாதசாரிகள் மீது மோதியும், அருகில் உள்ள மின்கம்பங்கள் அல்லது பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே  பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு விதிகளை மீறி வாகனங்களின் ஹெட்லைட்களில் பொருத்தப்பட்டுள்ள  எல்இடி பல்புகளை நீக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: