கிராம ஊராட்சிகளுக்கு ஆவண நோட்டுகளை வாங்கி அனுப்பும் மாவட்ட நிர்வாகம் ஊராட்சி தலைவர்கள் அதிருப்தி

நத்தம், ஏப். 14: திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஆவண நோட்டுகளை விநியோகிப்பதால் ஊராட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நத்தம் ஒன்றியத்தில் 23 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பணி மேற்பார்வையாளர்கள் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கான வருகை பதிவேடு போன்ற ஆவணங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த ஊராட்சியை சேர்ந்த தலைவர்கள் தங்களுக்கு தேவையான நோட்டுக்களை கடைகளில் அவ்வப்போது வாங்கி பயன்படுத்தி வந்தனர். இதனால் தேவையான நேரங்களில் வாங்கி பயன்படுத்தியதன் காரணமாக செலவுகள் மிச்சப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான ஆவணத்திற்கு பயன்படுத்தும் நோட்டுக்கள் போன்ற ஸ்டேஷனரி பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து நத்தம் ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டுக்கள் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த செயலர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது ஊராட்சி தலைவர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் தெரிவித்ததாவது, ‘ஊராட்சிகளுக்கு வரும் நிதிகளை பராமரிக்கும் பொறுப்பு ஊராட்சி தலைவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஊராட்சிக்கு தேவையான எழுது பொருட்கள், நோட்டுக்கள், தெரு விளக்குகள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் ஒரு ஆண்டுக்கு தேவையான நோட்டுக்களை அனுப்பி வைத்துள்ளது. மேலும் தெரு விளக்கும் கொள்முதல் செய்து அனுப்பி வைத்து விடுகிறார்கள். இவ்வாறு செய்யும் போது அவைகள் தரம் குறைவாக இருக்கும்பட்சத்தில் அவை பொருத்திய ஒரு சில நாட்களிலேயே பழுதாகி விடுகிறது. மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்தல் மூலம் பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி தேர்வு செய்து விட்டு அலுவலர்களே பொருட்களை கொள்முதல் செய்து அனுப்பும் போது எங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. எனவே சம்மந்தப்பட்ட துறையினர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உள்ள முக்கியத்துவத்தை வழங்கி உண்மையான பஞ்சாயத்து ராஜ் சட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்’ என்றனர்.

Related Stories: