கோடை வெப்பத்தால் காமராஜர் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் கிடுகிடு சரிவு பொதுமக்கள், விவசாயிகள் கவலை

சின்னாளபட்டி, ஏப். 14: கோடை வெப்பத்தால், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இதன் உயரம் 23.5 அடியாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள புல்லாவெளி, மணலூர், பெரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த நீர்த்தேக்கத்திற்கு வந்து சேரும். இந்த நீர்த்தேக்கம் மூலம் அப்பகுதி விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். மேலும் இங்கிருந்து சுமார் 3 லட்சம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சி மக்களுக்கு இந்த நீரே முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததாலும், கோடை வெயில் காரணமாகவும் காமராஜர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 17.8 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள்,  பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘காமராஜர் நீர்த்தேக்கத்தில் உள்ள 17.8 அடி தண்ணீரை வைத்து கோடை காலத்தை சமாளிக்க வேண்டும். கோடைமழை பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது’ என்றார்.

Related Stories: