திருவையாறுக்கு முதல்வர் வருகையால் திருமானூரில் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் 3 மணி நேரம் காத்திருப்பு

அரியலூர், மார்ச் 18: திருவையாறு தொகுதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையால் திருமானூரில் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மேலும் அரை மணி நேரம் நோயாளியுடன் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் திணறியது. தஞ்சை மாவட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணியளவில் பிரசாரம் செய்தார். இதற்காக, அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் வடபுறம் லாரிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் காலை 9.30 மணியளவில் கொள்ளிடம் சோதனை சாவடி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.இதற்கிடையில் அரியலூர் பகுதியிலிருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் திருமானூரில் சுமார் அரை மணி நேரம் நோயாளியை வைத்துக்கொண்டு போக வழியின்றி திணறியது. பின்னர் மாற்றுப்பாதையில், ஊருக்குள் புகுந்து தஞ்சைக்கு ஆம்புலன்ஸ் சென்றது. காலை 9.30 மணிக்கு ஏற்பட்ட போக்குவரத்து தடை மதியம் 12.30 மணி வரை நீடித்தது. இதனால் பயணிகள் மற்றும் வாகனஓட்டிகள் பெரிதும் வெறுப்படைந்தனர்.

Related Stories: