வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி, மார்ச் 3:  சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  தெய்வச்செயல்புரம், கீழத்தட்டப்பாறை மற்றும் மேலத்தட்டப்பாறை பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடி மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கிடங்குகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். வெடி மருந்து கிடங்குகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு நடத்திய அவர், அவற்றின் உரிமையாளர்களிடம், இந்த வெடி மருந்து பொருட்கள் கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வருவாய்த் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று, உரிய சான்றோடு வருபவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.  அவ்வாறு வாங்க வருபவர்களிடம் அப்படியே கொடுத்து விடக்கூடாது.

 வெடிமருந்து விற்பனை கிடங்கின் பணியாளர்கள் சென்று, அவர்களுக்கு கல்குவாரிகள் மற்றும் கிணறுகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து வெடிக்க வைக்க வேண்டும். மீதம் உள்ள வெடி பொருட்களை மீண்டும் அவர்களிடமிருந்து, திரும்ப பெற்று பாதுகாப்பான முறையில் கிடங்கில் இருப்பு வைக்க வேண்டும். முன், பின் தெரியாதவர்களுக்கோ, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கோ விற்கக்கூடாது என்றும், எவ்வித ஆபத்தும் நேராத அளவுக்கு வெடி மருந்து பொருட்களை கையாண்டு, வெடிமருந்து கிடங்குகளை பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

Related Stories: