எல்லை மீறி மீன்பிடித்ததாக கைது தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை விடுவிக்க கோரிக்கை

குளத்தூர், மார்ச் 3: மாலத்தீவு அருகே எல்லை மீறி மீன்பிடித்ததாக்கூறி கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள்  8 பேரை விடுவிக்க வேண்டும் என கனிமொழி எம்பியிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. குளத்தூர் அருகே தருவைகுளம் கடற்கரை சாலைப் பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் மகன் கெமில்டன் (35). இவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் கடந்த 12ம்தேதி தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த ஜான் சாமுவேல், அந்தோனி மிக்கேல் பாரத், கனகராஜ், வெள்ளப்பட்டியைச் சேர்ந்த அந்தோனிராபின், அபிஷேக்ராஜா, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த வசந்த், வினித் உள்ளிட்ட மீனவர்கள் 8 பேர் மாலத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்துவந்த மாலத்தீவு கடலோர பாதுகாப்பு படையினர் எல்லை மீறி மீன்பிடித்ததாகக் கூறி 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 இதனால் பாதிக்கப்பட்டுள்ள தருவைகுளம், வெள்ளப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த  மீனவமக்கள், கைதான 8 பேரையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழியிடம் வாட்ஸப் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர். இதை ஏற்றுக்கொண்டுள்ள அவர், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இதேபோல் சண்முகையா எம்எல்ஏவிடமும் கோரிக்கை விடுத்துள்ள தாக  தருவைகுளம் மீனவர் சங்கத்தலைவர் பன்னீர்  தெரிவித்தார்.

Related Stories: