×

₹96 கோடியில் உருவான ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட்

சேலம், மே 18: சேலம் மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் உள்பட பல்வேறு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் பணிகள் முடிவுற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் 2 மேம்பாலத்துடன் கூடிய ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 5வது பெரிய நகரமான சேலம் மாநகரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகரில் ஈரடுக்கு மேம்பால பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தில் 3வது பட்டியலில் சேலம் மாநகராட்சி இடம் பிடித்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி சேலம் மாநகரில் பழைய பஸ் ஸ்டாண்ட், வ.உ.சி.,மார்க்கெட் அடங்கிய பகுதிகள் ₹1000 கோடியில் உள் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுகிறது.

சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மாநகர பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பழைய பஸ் ஸ்டாண்டை நவீனப்படுத்த முடிவு செய்து, இடித்து அகற்றி விட்டு ₹92 கோடியில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டாக மாற்றும் பணி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. பழைய பஸ் ஸ்டாண்ட் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. பின்னர், அங்கு பில்லர் அமைக்கப்பட்டு, தரைதளம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. தற்போது திருவள்ளுவர் சிலையில் பழைய பஸ் ஸ்டாண்ட்டுக்கு வரும் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் லைட் வசதி, தார்சாலை, பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு, வெள்ளை, கரும்பு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இந்த ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் தரை தளத்தில் டூவீலர் பார்க்கிங், கடைகள், மேல் தளத்தில் பஸ்கள், நவீன வசதிகளுடன் கூடிய ஓட்டல்கள் அமைக்கப்படுகிறது. மேலும் பஸ் ஸ்டாண்டில் சோலார் பேனல் அமைக்கப்படுகிறது. ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் உள்பட பல பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகரில் சாலைகள் விரிவாக்கம், பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து அகற்றி விட்டு ₹96.53 கோடியில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டில் வைபை இணைப்புடன் பயணிகள் தங்கும் அறையும், பஸ் ஸ்டாண்டுக்கு 430 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 11,500 சதுர மீட்டரில் தரை தளம் அமைக்கப்பட்டு, 4586 சதுர மீட்டரில் வணிக உபயோகத்திற்காக 54 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் 1,181 வாகனங்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 29 கடைகளும், 11 அரசு அலுவலகங்களும் கட்டப்பட்டுள்ளது. இத்தளத்தில் 26 பஸ்கள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 2ம் தளத்தில் 47 கடைகள் அமைக்கப்பட்டு, 26 பஸ்கள் நிறுத்தம் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தளத்தில் 11 கடையும், ரயில் நிலையத்தில் உள்ளது போல், பஸ் ஸ்டாண்டில் வைபை இணைப்பு வசதியும், ஏ.சி வசதியும், பயணிகள் தங்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் இதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post ₹96 கோடியில் உருவான ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் appeared first on Dinakaran.

Tags : Bus Stand ,Salem ,Erudku Bus Stand ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது