₹85 கோடியில் அதிநவீன பால் பண்ணை

நாமக்கல், ஜூலை 30: நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ₹85 கோடியில் அதிநவீன பால்பண்ணை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும் என ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கரையங்காடு கிராமத்தில், கரடியால் தாக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காளிகவுண்டர், பழனிசாமி ஆகியோரை, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், இருவருக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, கலெக்டர் உமா, எம்எல்ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து, ராஜேஸ்குமார் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: கொல்லிமலை கரையங்காடு கிராமத்தில், கடந்த 27ம் தேதி கரடியால் தாக்கப்பட்ட காளிகவுண்டர், பழனிசாமி ஆகியோருக்கு, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு முறையே இழப்பீட்டு தொகையாக ₹59,100, ₹10,000 வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், முதல் தவணை நிவாரணத் தொகையை வழங்கினார். இரண்டாம் தவணையாக காளிகவுண்டருக்கு ₹29,100, பழனிசாமிக்கு ₹5,000 இழப்பீட்டு தொகையினை நான் நேரில் வழங்கினேன். கொல்லிமலை பகுதிகளில் வன விலங்குகள் பொதுமக்களை தாக்காமல் இருக்க, சாலைகளில் பொதுமக்கள் அறியும் வகையில், விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வனத்துறை அமைச்சர், மாவட்டத்தில் உள்ள வனத்துறை அலுவலலர்களை அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாமக்கல்லில் அதி நவீன பால்பண்ணை அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார். தற்போது, நவீன பால்பண்ணை அமைக்க ₹85 கோடியில் திருத்திய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், நவீன பால்பண்ணை அமைக்க ஏற்கனவே இடம் தேர்வு செய்யப்பட்டு, பூர்வாங்க பணிகள் நடந்துள்ளது. நவீன பால்பண்ணை அமைக்கும் பணி, இரண்டு மாத காலத்துக்குள் தொடங்கும்.

இதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள, காலியாக இருந்த நாமக்கல் மாவட்ட ஆவின் பொதுமேலாளர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது புதிய பொதுமேலாளரை நியமித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், தினமும் 2 லட்சம் லிட்டர் பால் ஆவினுக்கு விவசாயிகள் மூலம் வருகிறது. இந்த பாலை பதப்படுத்தி உபபொருட்கள் தயாரிக்கும் வகையில் நவீன பால்பண்ணை அமைக்கப்படுகிறது. இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நாமக்கல் கிளை பணிமனை வளாகத்தில், ஒரே நேரத்தில் 200 பணியாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில், நவீன வசதிகளுடன் ₹9 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வறையை, ராஜேஷ்குமார் எம்பி திறந்து வைத்து, போக்குவரத்து துறை பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், ராமலிங்கம் எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மேற்கு நகர செயலாளர் சிவக்குமார், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா, மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், தேவராஜன், கிருஷ்ணமூர்த்தி, சார்பு அணி அமைப்பாளர்கள் ராஜவேல், முரளி, கிருபாகரன், தொழில்நுட்ப அணி கடல்அரசன் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ₹85 கோடியில் அதிநவீன பால் பண்ணை appeared first on Dinakaran.

Related Stories: