×

₹7,890 கோடி மதிப்பில் திட்ட வடிவமைப்பு மாற்றியமைப்பு

தர்மபுரி, ஜூன் 15: தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும், கூடுதலாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்க, 2ம் தொகுப்பு ₹4,600 கோடியில் இருந்து ₹7,890 கோடியில் திட்ட வடிமைப்பு மாற்றி நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நிலத்தடி நீரில் புளோரைடு என்ற நச்சு தன்மை உப்பு உள்ளது. இந்த தண்ணீரை குடிக்கும் மக்கள் கறை படிந்த பற்கள், முடக்குவாதம், மூட்டுவலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகினர். இந்த நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க, கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி, தமிழக முதல்வர் கருணாநிதி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இந்தியாவில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களில் மிகப்பெரிய திட்டமாக, அப்போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கருதப்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு, ₹1928.80 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போதைய தமிழக முதல்வரும், அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் 19 முறை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்து, நிறைவடையும் தருவாயில் கொண்டு வந்தார். ஆனால், 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. பின்னர், அவசர கதியில் கடந்த 2013ம் மார்ச் 19ம் தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகரப்பகுதி மற்றும் சில கிராமங்களில் மட்டும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் சென்றடைந்தது. ஊரக பகுதிகளில் இத்திட்டம் முழுமையாக சென்றடையவில்லை. இதனால் ஊரக பகுதிகளில் உள்ள கிராம மக்கள், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் கிடைக்காமல், ஆழ்துளை கிணறுகளை நம்பி இருந்து வரும் நிலை உள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் குடிநீர் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் ₹4600 கோடியில் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். தற்போது 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் ₹7,890 கோடியாக திட்ட மதிப்பீடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் நிறைவேற்ற, அதற்கான திட்ட வடிவமைப்பு பணிகள் அலுவலக ரீதியான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம், புளோரைடு இல்லாத, பாதுகாப்பான குடிநீர் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட திட்டத்தில், சில கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, முதல்வர் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் 2ம் தொகுப்பாக ₹4600 கோடியில் நிறைவேற்ற அறிவித்தார். தற்போது அது ₹7,890 கோடியாக மாற்றி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அலுவலக ரீதியாக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது ஒருநபருக்கு 30லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால், 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இதன் மூலம், அனைத்து கிராமத்திற்கும் முழுமையாக குடிநீர் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ₹7,890 கோடி மதிப்பில் திட்ட வடிவமைப்பு மாற்றியமைப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Okanakkal ,Dinakaran ,
× RELATED சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம்...