×

நாமக்கல்லில் ₹5 கோடியில் புதிய சந்தை வளாகம் 282 கடைகள் நடத்த ₹1 கோடிக்கு டெண்டர் இறுதி

*முன்பதிவு அறிவிப்பால் பரபரப்பு

நாமக்கல் : நாமக்கல்லில், ₹5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சந்தை வளாகத்தில் 282 கடைகள் நடத்த ₹1 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. கடைகள் நடத்த முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சந்தை வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாமக்கல் -திருச்செங்கோடு ரோட்டில், நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள காலி இடத்தில் தினசரி சந்தை மற்றும் வாரச்சந்தை கடந்த 10 ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

இங்கு 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தற்காலிக டெண்ட் அமைத்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். சந்தை வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, கலைஞரின் நகர்ப்புற மேம்பாடுத் திட்டத்தின் கீழ், ₹5.69 கோடியில் புதிய சந்தை வளாகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. இதையடுத்து, வியாபாரிகளுக்கு சந்தை வளாகத்திலேயே நகராட்சி நிர்வாகம் மாற்று இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்தது.

புதிய சந்தை வளாகம் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. 3 பகுதிகளாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 282 கடைகள் இடம் பெற்றுள்ளன. தினசரி சந்தை, வாரச்சந்தை, இறைச்சி விற்பனையாளர்கள் என அனைவருக்கும் கடைகள் ஒதுக்கும் வகையில், புதிய சந்தை வளாகம் அமைந்துள்ளது. புதிய சந்தை வளாகத்தில் ஓராண்டு கடை நடத்திக் கொள்ள நகராட்சி நிர்வாகத்தால் பொது ஏலம் விடப்பட்டது.

இந்த பொது ஏலம் கடந்த மாதம் ரூ.1.03 கோடிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் காண்ட்ராக்டர் ஒருவர் இந்த கடைகள் நடத்த டெண்டர் எடுத்துள்ளார். இதையடுத்து, சந்தை திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. சந்தைக்குள் சாலை வசதி மேம்பாடு, மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில், சந்தையில் கடைகள் நடத்த டெண்டர் எடுத்தவர்கள், சந்தை வளாகத்தில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளனர்.

அதில், நாமக்கல் நகராட்சி தினசரி சந்தை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தையில் காய்கறி, இறைச்சி, ஓட்டல்கள், டீக்கடைகள் நடத்த விருப்பம் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். ஏற்கனவே சந்தையில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தினசரி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி அலுவலகம் பின்புறம் புதிய சந்தை வளாகம் அதிகமான நிலப்பரப்பில் அமைந்துள்ளதால், அனைத்து வியாபாரிகளுக்கும் கடை ஒதுக்கீடு செய்யப்படும் என நகராட்சி
அலுவலர்கள் தெரிவித்தனர்.

The post நாமக்கல்லில் ₹5 கோடியில் புதிய சந்தை வளாகம் 282 கடைகள் நடத்த ₹1 கோடிக்கு டெண்டர் இறுதி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் நடமாட்டம் குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்