×

₹40.38 கோடியில் மழைநீர் வடிகால், ஏரி சீரமைப்பு

சேலம், ஜூலை 4: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்தல், ஏரி சீரமைப்பு செய்தல், கால்வாய் மறு சீரமைப்பு செய்தல் உள்பட பணிகள் ₹40 கோடியே 38 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாநகராட்சி பகுதியில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சேலம் மாநகர பகுதியில் சாக்கடை கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர், குப்பை கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தி பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது. சுகாதாரத்தை பேணிகாக்கும் வகையில் சேலம் மாநகராட்சி கடந்த 2007ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் அப்போதை திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

அதன்பின் வந்த அதிமுக.,வினர் இரண்டு ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை கிடப்பில் போட்டனர். மேலும் சேலம் மாநகர பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதேபோல் பல ஆண்டாக ஏரிகள் மறு சீரமைக்கப்படவில்லை. சாக்கடை கால்வாயில் உயர்மட்ட மேம்பாலம் உள்பட பணிகள் நடைபெறாமல் இருந்தது. சில இடங்களில் மட்டும் அவ்வப்போது பெயரளவில் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்னும் திட்டத்தை அறிவித்தார். அவர் முதல்வரான பிறகு இத்திட்டம் அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இத்திட்டம் மூலம் இதுவரை பல லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இவ்வாறு வரப்பெற்ற மனுக்களுக்கு அவ்வப்போது தீர்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சேலம் மாநகராட்சியில் பொதுமக்களின் நீண்ட கோரிக்கையான மழைநீர் வடிகால் அமைத்தல், ஏரியை மறு சீரமைப்பு செய்தல், கால்வாய் மறு சீரமைப்பு செய்தல், அறிவுசார் நூலகம் அமைத்தல், உயர்மட்டபாலம் கட்டுதல் உள்பட பல அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் சட்டமன்ற வாரியாக ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான திட்டமதிப்பீட்டை மாநகராட்சி நிர்வாகம் தயார் செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாநகரட்சியில் பொதுமக்களின் நீண்ட நாளான கோரிக்கை பல உள்ளன. அவற்றில் முக்கியமாக மழைநீர் வடிகால், ஏரியை மறு சீரமைப்பு, கால்வாய் மறு சீரமைப்பு உள்பட பல பணிகள் உள்ளது. இப்பணிகள் சட்டமன்ற வாரியாக ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 49வது வார்டில் செவ்வாய்பேட்டை முதல் அகரம் காலனி வரை ₹88 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. அதே வார்டில் அகரம் காலனி முதல் சூரியகவுண்டர் காடு வரை ₹92 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட 3வது வார்டில் இஸ்மாயில்கான் ஏரி 16.19 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்த ஏரியை சுற்றி ₹39 லட்சம் மதிப்பில் கம்பி வலை அமைக்கப்படுகிறது.

17வது வார்டில் பேர்லண்ட்ஸ் முருகன் கோயில் முதல் ஆலமரத்து காடு வரை ₹8 கோடியில் பேர்லண்ட்ஸ் கால்வாய் சீரமைக்கப்படுகிறது. 6வது வார்டில் சரஸ்வதி நகர் மற்றும் முல்லை கார்டன் பகுதியில் ₹2 கோடியில் வாய்க்கால் மறு சீரமைப்பு செய்யப்படுகிறது. சித்தர் கோயில் பிரதான சாலையில் ஆர்சிசி மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைத்தல், செங்கோட்டை ஓடையில் கால்வாய் மற்றும் சுவர் சிலாப் அமைத்தல் உள்ளிட்டவைகள் ₹7 கோடியிலும், சூரமங்கலம் வார்டு அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம் ₹2 கோடியே 50 லட்சத்திலும், சேலம் வடக்கு சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட 10வது வார்டில் திருமணிமுத்தாறு ஆற்றில் செங்கலணை சாலையில் உயர்மட்ட மேம்பாலம் ₹13 கோடியே 75 லட்சத்திலும், 14 மற்றும் 15வது வார்டில் அஸ்தம்பட்டி செரிரோடு பிரதான சாலையில் மழைநீர் வடிகால் ₹4 கோடியில் அமைக்கப்படுகிறது. 3வது வார்டில் ெபான்குமார் மைன்ஸ் சாலையில் இருந்து மேச்சேரியான் வட்டம் பிரதான சாலை ₹94 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் ₹40 கோடியே 38 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. இதற்கான கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி வந்தவுடன் சீரமைக்கும் பணி தொடங்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post ₹40.38 கோடியில் மழைநீர் வடிகால், ஏரி சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Corporation ,Dinakaran ,
× RELATED சேலம் மாநகராட்சி முன்னாள்...