×

₹12 கோடியில் நவீனமயமாகிறது அம்பத்தூர் பேருந்து நிலையம்: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்

சென்னை, ஏப்.24: அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12 கோடியில் நவீனமயமாக்கப்படுவதாக, சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் அம்பத்தூர் பேருந்து நிலையம் முக்கியமான பேருந்து நிலையத்தில் ஒன்று ஆகும். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து, பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இருக்கும் அம்பத்தூர் பேருந்து நிலையத்தில், சேதமடைந்த தரை, மேற்கூரைகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பற்ற இடமாக இருந்து வருகிறது. மிகவும் மோசமாக அதிகாரிகள் பராமரிப்பதாகவும், அதிகம் பேருந்து நிறுத்த இடம் இல்லாமல் இருப்பதாகவும் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது அனைத்தையும் சரி செய்து பேருந்து நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் அம்பத்தூர் பேருந்து நிலையத்தை ₹12 கோடியில் புதுப்பிக்க போவதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அம்பத்தூர் பேருந்து நிலையம் சுமார் 1.6 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இதில் 26 ஆயிரம் சதுர அடியில் எம்டிசி அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அம்பத்தூர் பகுதி வளர்ச்சி அடையும். இந்த பணிகள் அனைத்தும் சுமார் 12 கோடி ரூபாய் செலவில் நடைபெற இருக்கிறது. மேலும் 20 பேருந்துகளை நிறுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்த பணிகள் அனைத்தும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்னும் சில பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

The post ₹12 கோடியில் நவீனமயமாகிறது அம்பத்தூர் பேருந்து நிலையம்: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ambattur ,CMDA ,Chennai ,Bus Station ,Dinakaran ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை;...