×

தேனி மாவட்டம் முழுவதும் கொட்டியது மழை : 137.4 மிமீ மழை பெய்தது

தேனி: தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 137.4 மிமீ மழை பதிவானது. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ந்து கடும் வெயில் கொளுத்தி வருகிறது. கொளுத்தும் வெயிலால் பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாடுவது பெருமளவு குறைந்துள்ளது. இதுதவிர வெயில் கொடுமையின் காரணமாக குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வயிற்றுப் போக்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதனால் தேனி மாவட்டத்தில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒருவாரமாக தேனி மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் பெரியகுளத்தில் 13 மிமீ, வைகை அணையில் 9.40 மிமீ, தேக்கடியில் 9.20 மிமீ, பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் 3.60 மிமீ, போடியில் அதிகபட்சமாக 99.20 மிமீ மழையும், சோத்துப்பாறையில் 3 மிமீ என மாவட்ட அளவில் மொத்தம் 137.40 மிமீ மழை பெய்தது.

சராசரியாக 11.45மிமீ மழையளவு பதிவானது. தேனி மாவட்டத்தில் பெய்த இம்மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும், மா விவசாயிகள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. இவ்வாண்டு மா விளைச்சல் பெரிதும் குறைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் போடி பகுதியில் விளைந்த மா மரங்களில் இருந்து பெருமளவில் உதிர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags :
× RELATED மக்களுடன் முதல்வர், காலை உணவுத்...