×

வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் 50% மானியத்தில் இடுபொருட்கள் நெல் அறுவடைக்கு பின் ‘எள்’ பயிரிட்டு பயன்பெறலாம்: வேளாண்மை துறை அறிவிப்பு

சென்னை: வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் 50% மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுவதால் நெல் அறுவடைக்கு பின் “எள்” பயிரிட்டு விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண்மை துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, வேளாண்மை துறை வெளியிட்ட அறிக்கை: எண்ணெய் வித்துக்களின் இளவரசி என்று அழைக்கப்படும் எள் பயிரானது தமிழ்நாட்டில் பயிரிடப்படும் எண்ணெய் வித்துக்களில் இரண்டாவது முக்கிய பயிராக உள்ளது. இப்பயிர்  இயல்பாக  42,690 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டு 24,835 மெ.டன் என்ற அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. நெல் பயிரை முப்போகம் சாகுபடி செய்வதால் மண் வளம் பாதிக்கப்படுவதோடு தண்ணீர் தேவையும் அதிகரிக்கிறது. சம்பா, தாளடி நெல் அறுவடைக்குப் பின் எஞ்சியுள்ள ஈரத்தையும் கோடை பருவ மழையும் முழுமையாக பயன்படுத்தி மாசி பட்டத்தில் எள் பயிரை சாகுபடி செய்யலாம். மிகக் குறுகிய காலமான 80-85 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 250 கிலோ மகசூல் தரும் மற்றும் குறைந்த அளவு நீர் தேவைப்படும் பயிராகும். எள்ளுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடிய பயிராக உள்ளது. மாசி பட்டத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் எள் பயிரிடப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் நெல் தரிசில் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி திட்டம் மூலம் எள் பயிரில் அதிக மகசூல் பெறுவதற்கு சான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணி ஆகிய இடுபொருட்கள் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டு காரணி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கவும். உயிர் உரங்கள் இடுவதன் மூலம் மண் வளம் மேம்படுகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே, விவசாயிகள் நெல் அறுவடைக்குப்பின் “எள்” பயிரினை மாசி பட்டத்தில் பயிரிட்டு குறுகிய காலத்தில் கூடுதல் வருமானம் பெற விவசாய பெருங்குடி மக்களை  அரசு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் 50% மானியத்தில் இடுபொருட்கள் நெல் அறுவடைக்கு பின் ‘எள்’ பயிரிட்டு பயன்பெறலாம்: வேளாண்மை துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Agriculture Extension Center ,Agriculture Department ,Chennai ,Agriculture Extension Centre ,Dinakaran ,
× RELATED நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்த வழிமுறை