×

எம்.டி.சி.யில் மீண்டும் சர்ச்சை மேலாளர்கள் 14 பேரை இடமாற்றம் செய்த உத்தரவு திடீர் ரத்து?

சென்னை: சென்னை எம்டிசியில் மேலாளர்கள் 14 பேரை இடமாற்றம் செய்த உத்தரவு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் துணை மேலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் 14 பேரை இடமாற்றம் செய்து மேலாண் இயக்குனர் அன்பு ஆப்ரகாம் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:
தண்டையார்பேட்டை பஸ் டெப்போ துணை மேலாளர் (ஒர்க்ஸ்) வி.கிருஷ்ணமூர்த்தி குரோம்பேட்டை டெப்போவுக்கும், குரோம்பேட்டை துணை மேலாளர் வி.ராமன் தண்டையார்பேட்டைக்கும், தலைமையிட துணை மேலாளர் ஆர்.மணிவண்ணன் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் (இயக்கம்) துணை மேலாளராகவும், கோயம்பேடு பஸ் பஸ் ஸ்டாண்டு துணை மேலாளர் பி.தமிழரசன் அயனாவரத்துக்கும், பாடியநல்லூர் டெப்போ உதவி மேலாளரும், கிளை மேலாளருமான வி.பி.கணேச மூர்த்தி தண்டையார்பேட்டைக்கும், தண்டையார்பேட்டை உதவி மேலாளர் செந்தில்குமார் கே.கே.நகருக்கும், பேசின்பிரிட்ஜ் உதவி மேலாளர் மணிவண்ணன் பாடியநல்லூருக்கும், அயனாவரம் வடக்கு வருவாய் உதவி மேலாளர் வரதராஜன் அண்ணாநகருக்கும், குரோம்பேட்டை ஓட்டுநர் பயிற்சி பள்ளி முதல்வர் சரிதா குரோம்பேட்டை ஸ்டோருக்கும், வடபழனி டெப்போ மூத்த உதவி பொறியாளரும், கிளை மேலாளருமான சுரேஷ் பேசின் பிரிட்ஜ் டெப்போவுக்கும், குரோம்பேட்டை உதவி பொறியாளர் குமார் வடபழனி டெப்போவுக்கும், கே.கே.நகர் உதவி பொறியாளர் சதீஷ் குமார் குரோம்பேட்டைக்கும், குரோம்பேட்டை பயிற்சி மைய உதவி பொறியாளர் சிவகுமார் குரோம்பேட்டை ஓட்டுநர் பயிற்சி மைய முதல்வராகவும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு கூறியிருந்தார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவே அவசர, அவசரமாக இந்த உத்தரவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்து கிளை மேலாளர் ஒருவர் கூறியதாவது: எம்டிசியில் கடந்தாண்டில் கூட, ரூ.519 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை தெரிவித்துள்ளது. எனவே, நேற்று முன்தினம் இடமாறுதல் உத்தரவு வெளியாகியுள்ளது. இது முழுக்க, முழுக்க மேலாண் இயக்குனரின் அதிகாரத்துக்குட்பட்டது. எனவே துறை அமைச்சருக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் முன்பிருந்த அதிகாரிகள் கொண்டு வந்த நடைமுறையால், சின்ன, சின்ன விஷயங்களை கூட அமைச்சரிடம் கேட்டுதான் செய்ய வேண்டும் என்ற நிலைமை எம்டிசியில் நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், தற்போது நடந்த இடமாறுதல் உத்தரவு குறித்து அமைச்சருக்கு தகவல் சொல்லவில்லை என தெரிகிறது. இதனால் டென்ஷன் ஆன ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் அமைச்சருக்கு நெருக்கமானவர்களிடம் விஷயத்தை போட்டு உடைத்துள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட நெருக்கடியால்தான் இடமாறுதல் உத்தரவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநர் பள்ளி முதல்வருக்காக உத்தரவு ரத்தா? குரோம்பேட்டை ஓட்டுநர் பயிற்சி பள்ளி முதல்வராக உள்ள சரிதா மீது பல்வேறு புகார்கள் உள்ளன. தற்போது இடமாறுதல் பட்டியலில் சரிதாவும் உள்ளார். எனவே அவரை காப்பாற்றுவதற்காகத்தான் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதா என்று ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு