×

வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி ₹7.59 கோடி மோசடி

வேலூர், டிச.21: வேலூரில் மாத ஏலச்சீட்டு நடத்தி ₹7.59 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 20 பேர் நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஏடிஎஸ்பிக்கள் கோட்டீஸ்வரன், கவுதமன் ஆகியோர் கலந்துகொண்டு மனுக்கள் பெற்றனர்.இதில், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்தவரிடம் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஏலச்சீட்டில் சேர்ந்து மாத தவணை செலுத்தி வந்தோம்.

நாங்கள் ஒவ்வொருவரும் ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை செலுத்தினோம். கடந்த 2022ம் ஆண்டு வரை பலர் சீட்டு எடுத்தும், அதற்கான தொகையை தராமல் சீட்டு நடத்தியவர் தட்டிக்கழித்து வந்தார். 20க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்னும் பணம் தரவில்லை. நாங்கள் கேட்டபோது அனைவருக்கும் பணத்தை தருவதாக சமரசப்படுத்தி அனுப்பினார். ஆனால் அதன் பின்னர் அவர் திடீரென மாயமாகிவிட்டார். எங்கள் 20 பேரிடம் மொத்தம் ₹7 கோடியே 59 லட்சத்தை தராமல் தற்போது தலைமறைவாகி உள்ளார். எனவே அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

The post வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி ₹7.59 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tiruvannamalai ,
× RELATED வேலூர் ஓட்டேரி கரையோர பகுதிகளில்...