×

நெல்லைக்கு லாரிகள் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து வந்த பல்லாரி வெங்காயம் அழுகியது

நெல்லை: நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம், கடந்த 20ம் தேதி தொடங்கியது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச் சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒருமுறை சங்க கட்டணம் வசூலிக்க வேண்டும். மூன்றாம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் லாரி உரிமையாளர்களின் போராட்டம் நேற்று 7வது நாளாக நீடித்தது. நெல்லை மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இதனால் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு வடமாநிலங்களில் இருந்து பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் வரவில்லை.

இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காய்கறி விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.. குறிப்பாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70 ஆகவும், கேரட் ரூ.60 ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட பல்லாரி மூடைகள், ஸ்டிரைக் காரணமாக நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டில் இறக்காமல் அப்படியே லாரியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் வந்துள்ள ரூ.பல லட்சம் மதிப்புள்ள இந்த பல்லாரி மூடைகள், தற்போது அழுகிய நிலையில் உள்ளன.

சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் வௌிமாநில லாரி டிரைவர்கள், கிளீனர்கள் ஸ்டிரைக் காரணமாக வேலையில்லாமல் தவிக்கின்றனர். லாரி ஸ்டிரைக் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு உள்ளே வந்த கப்பல்களில் சரக்குகளில் ஏற்றி, இறக்க முடியாத நிலை உள்ளது. பல்வேறு கப்பல்கள் சரக்குகளுடன் கடலில் நிற்கிறது. இதனால் ரூ.பல கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் உப்பு ஏற்றுமதியும் அடியோடு முடங்கியுள்ளது. பல லட்சம் டன் உப்புகள் தேக்கமடைந்துள்ளன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Nellai, lorries, Maharashtra, palariy onions
× RELATED காவடி ஆட்டத்துடன் பழநிக்கு புறப்பட்ட தேவகோட்டை பக்தர்கள்