×

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி விற்பனை செய்ததாக ஓராண்டில் 20 காவலர்கள் சஸ்பெண்ட்

சென்னை: வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தமிழகத்தில் விற்பனை செய்ததாக ஓராண்டில் மட்டும் 20 காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருளுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஓராண்டில் போதைப்பொருளுக்கு எதிராக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ‘போதைக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கஞ்சா மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறையுடன் இணைந்து போலீசார் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக போதைப்பொருட்கள் நடமாட்டம் உள்ள தென் மண்டலத்தில் இதுவரை கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக அதிகபட்சமாக 831 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி விற்பனை செய்து வந்த குற்றவாளிகளின் சொத்துகள் மற்றும் 1,450 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவின்படி புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்த காவலர்கள் சஸ்பெண்ட் என போதைப்பொருளுக்கு எதிராக கமிஷனர் சங்கர் ஜிவால் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதோடு மட்டும் இல்லாமல் குற்றவாளிகளை கைது செய்து, கஞ்சா கொள்முதல் செய்யப்படும் ஆந்திரா மாநிலத்திற்கே சென்று விற்பனை செய்யும் கஞ்சா வியாபாரிகளை கூண்டோடு கைது செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்திய நபர்கள், கஞ்சா வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, குற்றவழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை திருடி விற்பனை செய்ததாக 20 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நேரடியாக கஞ்சா விற்பனை செய்ததாக 3 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் உத்தரவுப்படி போதைப்பொருளுக்கு எதிராக தமிழக காவல்துறை அதிரடியாக களமிறங்கியுள்ளது. இதனால் வெளிமாநில கஞ்சா வியாபாரிகள் முதல் உள்ளூர் கஞ்சா வியாபாரிகள் வரை தற்போது கலக்கமடைந்துள்ளனர்….

The post வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி விற்பனை செய்ததாக ஓராண்டில் 20 காவலர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,TN ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...