×

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன் கொலை கள்ளத்தொடர்பு தெரிந்து தாக்கியதால் கழுத்தை அறுத்துக் கொன்றோம்

* கைதான மனைவி, கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்சேலம்: கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்து தாக்கியதால் கணவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தோம் என கள்ளக்காதலனுடன் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). ரிக் வண்டி ஆபரேட்டர். இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்த விஜயலட்சுமி (34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹரிகரன் (13), சுப்பிரியா (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சேலம் மிட்டபுதூரை சேர்ந்தவர் குமரன் (30). இவர் விஜயலட்சுமியின் தங்கை சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டனர். இதையடுத்து குமரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்.மனைவியின் தங்கையை திருமணம் செய்திருந்ததால் வெங்கடேசனுக்கும், குமரனுக்கும் பழக்கம் இருந்து வந்தது. இச்சூழலில் வெங்கடேசன், ஆத்தூரில் இருந்து சேலத்தில் வந்து குடியேற முடிவு செய்திருந்தார். இதற்காக குமரன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகாபுரத்தில் உள்ள பெரியபுதூரில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து கொடுத்தார். அங்கு வெங்கடேசன், விஜயலட்சுமி தம்பதியினர் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன், கோவையில் உள்ள கம்பெனி மூலமாக தென்ஆப்ரிக்காவுக்கு வேலைக்கு சென்றார். அப்போது தனது மனைவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் படி குமரனிடம் கூறிவிட்டு, ஏடிஎம் கார்டையும் கொடுத்துவிட்டு வெங்கடேசன் சென்றுள்ளார். அவரும் அனைத்து உதவிகளையும் செய்து வந்த நிலையில் விஜயலட்சுமிக்கும், குமரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று மாலை அழகாபுரம்புதூர் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பாவிடம், விஜயலட்சுமியும், குமரனும் திடீரென சரண் அடைந்தனர். இருவரும் சேர்ந்து வெங்கடேசனை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி உடலை கிணற்றில் வீசிவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விஜயலட்சுமி, குமரன் ஆகிய இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது விஜயலட்சுமி, தென்ஆப்ரிக்காவில் இருந்து கணவர் வெங்கடேசன் கடந்த 10ம்தேதி சேலம் வந்ததாகவும், வந்தவுடன் தனக்கு குமரனுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பை அறிந்து தன்னை கடுமையாக அடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் இருவரும் சேர்ந்து அவரை கொன்று கிணற்றில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று, கிணற்றுக்குள் கிடந்த சாக்குமூட்டையை வெளியே எடுத்தனர். அதனுள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெங்கடேசன் சலமாக கிடந்தார்.இதையடுத்து வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை கொலை செய்த விஜயலட்சுமி, கள்ளக்காதலன் குமரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். விஜயலட்சுமி அளித்த வாக்குமூலம்:கணவர் வெங்கடேசன் வெளிநாடு சென்றதும், எனக்கு உதவி செய்ய அடிக்கடி குமரன் வீட்டிற்கு வருவார். வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொடுப்பார். குழந்தைகளுக்கு தேவையானவற்றையும் செய்து தருவார். அப்போது அவருடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் வீட்டிலேயே உல்லாசமாக இருப்போம். எங்களது கள்ளக்காதல் எப்படியோ தென்ஆப்பிரிக்காவில் இருந்த கணவர் வெங்கடேசனுக்கு தெரிந்துவிட்டது. இதனால் அவர் ஊருக்கு வந்தார். அவரை அழைத்து வர கோவைக்கு குமரன் தான் காரில் சென்றார். இருவரும் வரும் வழியில் மது குடித்துவிட்டு தான் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்த வேகத்தில் என்னை கடுமையாக அடித்தார். அப்போது நான் இல்லாதபோது குமரனுடன் தொடர்பு வைச்சிருக்கியா எனக்கேட்டு தாக்கினார். என்னை ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு, குமரனை கொலை செய்ய இரும்பு ராடால் தாக்கினார். அவர், அதனை பிடித்து தடுத்துக்கொண்டு எனது கணவர் வெங்கடேசனை கீழே தள்ளினார். தொடர்ந்து இரும்பு ராடால் தாக்கி, அருவாமனையால் அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தோம். பிறகு சடலத்தை ஒரு சாக்குப்பை போட்டு, கல்லைக்கட்டி கிணற்றிற்குள் கொண்டு போட்டுவிட்டோம். யாருக்கும் தெரியாது என இருந்தநிலையில், கிணற்றில் போட்ட சாக்குமூட்டை மேலே வந்து மிதக்க ஆரம்பித்துவிட்டது. இதனால், எப்படியும் மாட்டிக் கொள்வோம் என்பதால், சரணடைந்தோம், என வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்….

The post வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன் கொலை கள்ளத்தொடர்பு தெரிந்து தாக்கியதால் கழுத்தை அறுத்துக் கொன்றோம் appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED தூய்மை குறித்து மாணவர்கள் கலைநிகழ்ச்சி