×

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்திய 5.5 கிலோ தங்கம், ₹24.6 லட்சம் பறிமுதல்: 11 பேர் கைது

மீனம்பாக்கம்: தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு விமானம் வழியாக பணம், நகை, பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க சுங்கத்துறையினருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, சுங்கத் துறையினர் தனியாக பறக்கும் படைகள் அமைத்து பண நடமாட்டம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்துச் செல்வதை கண்காணித்து வருகின்றனர். ஆனால், அதன்படி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க சோதனைகள் கடந்த சில நாட்களாக சரிவர நடைபெறவில்லை. இதை பயன்படுத்தி, கடத்தல் கும்பல் பெரிய அளவில் தங்கம், ரொக்கம் கடத்த உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால், சோதனையை தீவிரப்படுத்தினர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பிளை துபாய் சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அக்பர் அலி (39), சென்னையை சேர்ந்த அசன் (26) ஆகியோரின் தலை முடி அலங்காரம் வித்தியாசமாக இருந்தது. இதனால், தலைமுடியை இழுத்து  பார்த்தனர். அப்போது, அது கையோடு வந்துவிட்டது. அதில் 596 கிராம் தங்க பேஸ்ட்கள் இருந்தன. அதே விமானத்தில் திருச்சியை சேர்ந்த பாலு கணேசன் (42), என்பவரும் வந்தார். அவருடைய உள் ஆடைக்குள்  622 கிரம் தங்கம் இருந்தது.இதையடுத்து அதே விமானத்தில் வந்த விழுப்புரத்தை சேர்ந்த அன்பழகன் (28), அணிந்திருந்த ஷூ சாக்சில் இருந்த ஒரு கிலோ 350 கிராம் தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர். அவரை விசாரித்தபோது, சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் தான் கடத்தலுக்கு அனுப்பிவைத்ததும், தேர்தல் நேரம் என்பதால் அதிகாரிகள்  கண்டுகொள்ள மாட்டார்கள் என கூறியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, தமீம் அன்சாரியையும் கைது செய்தனர். இதேபோல், துபாயில் இருந்து நேற்று அதிகாலை சென்னை வந்த இன்டோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானத்தை சுத்தம் செய்தபோது, ஒரு சீட்டுக்கு அடியில் 933 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. யாரோ ஒரு கடத்தல் ஆசாமி சுங்க சோதனை நடப்பதை அறிந்து, சீட்டுக்கடியில் அப்படியே விட்டுச் சென்றது தெரிந்தது. இதனிடையே, சார்ஜாவில் இருந்து நேற்று மாலை சென்னை வந்த எமரேட் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானத்தில் சேலத்தை சேர்ந்த சையத் அகமதுல்லா (42), சந்தோஷ் செல்வம் (33), ராமநாதபுரததை சேர்ந்த அப்துல்லா (35) ஆகியோரும் தலையில் வைத்திருந்த விக்கில் 2 கிலோ 8 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அதை கைப்பற்றினர். 7 பயணிகளிடம் இருந்து 5 கிலோ 550 கிராம் தங்கம் கைப்பற்றினர். அதன் மதிப்பு ₹2.53 கோடி நேற்று காலை சென்னையில் இருந்து சார்ஜா செல்லும் கல்ப் ஏர்லைன் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் நடத்திய சோதனையில், சென்னையை சேர்ந்த 4 பேர் ஒரு குழுவாக சார்ஜா செல்ல வந்திருந்தனர். இவர்களுடைய சிகை அலங்காரமும் வித்தியாசமாக இருந்தது. சோதனையில் ₹24.6 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், சவுதி ரியாஸ் இருந்தது. அதை பறிமுதல் செய்து, அவர்களுடைய பயணத்தை ரத்து செய்தனர். ஒரு நாளில் சென்னை விமான நிலையத்தில் ₹2.77 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ₹24.6 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்திய 5.5 கிலோ தங்கம், ₹24.6 லட்சம் பறிமுதல்: 11 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meenambakkam ,Tamil Nadu Assembly ,
× RELATED சென்னை மீனம்பாக்கத்தில் 100.4 டிகிரி...