×

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக சிலிண்டர் விலை ரூ.116.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,893, சேலத்தில் ரூ.1,846.50 ஆக நிர்ணயம்

சேலம்: நாடு முழுவதும் வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை குறைக்கப்படாத நிலையில், கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை ரூ.116.50 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான(நவம்பர்) புதிய விலையை நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் சென்னையில் ரூ.1,068.50, சேலத்தில் ரூ.1,086.50 ஆக நீடிக்கிறது.19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை பொறுத்தவரை, நடப்பு மாதத்திற்கு ரூ.116.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ரூ.2,009.50ல் இருந்து ரூ.1,893ஆக குறைந்துள்ளது. சேலத்தில் ரூ.1,963ல் இருந்து ரூ.1,846.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டெல்லியில் ரூ.1,743, மும்பையில் ரூ.1,695, கொல்கத்தாவில் ரூ.1,843 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நகரங்களுக்கு இடையே வேறுபட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பல மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளதால், அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் வர்த்தக சிலிண்டர் விலை 7வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மக்கள் அதிகம் பயன்படுத்தும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை அரசியல் கட்சியினரும், மக்களும் வலியுறுத்தியுள்ளனர்….

The post வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக சிலிண்டர் விலை ரூ.116.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,893, சேலத்தில் ரூ.1,846.50 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salem ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக...