×

வீட்டில் மது விற்பனை நடப்பதாக கூறி ஈரோட்டில் மக்கள் மறியல் போராட்டம்

 

ஈரோடு, மே 31: ஈரோட்டில், வீட்டில் மது விற்பனை செய்து வருவதை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 9வது வார்டுக்கு உட்பட்டது எஸ்எஸ்பி நகர். இப்பகுதியில் உள்ள அரிஜன காலனியில் 2 குடும்பத்தினர் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வந்து மது அருந்தி செல்வோர் போதையில், அருகில் உள்ள வீடுகளின் திண்ணைகளிலும், வாசல்களிலும் விழுந்து கிடக்கின்றனர். இதனால், பெண்கள், குழந்தைகள் கடும் அச்சத்துக்குள்ளாகி உள்ளனர். வருடக்கணக்கில் நடைபெற்று வரும் இந்த மது விற்பனை குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கடும் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஈரோடு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மது விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து, அப்பகுதி வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் கூறுகையில், ‘‘ஆண்டுக்கணக்கில் இப்பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத மது விற்பனை குறித்து ஈரோடு வடக்கு போலீசில் பல முறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த மக்கள் இன்று ரோட்டுக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து, ஈரோடு மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டர் ஆகியோருக்கும் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளேன். இப்பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காணவேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

The post வீட்டில் மது விற்பனை நடப்பதாக கூறி ஈரோட்டில் மக்கள் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...