×

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை : குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இது கோவை குளங்களை நிரப்பி வருகிறது. தென் மேற்கு பருவ மழையின் காரணமாக கோவையை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பெய்த கன மழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. சுண்ணாம்பு கால்வாய், பேரூர் படித்துறை ஆகியவற்றில் நீர் பெருக்கெடுத்து சென்றது. நொய்யல் ஆற்றில் இருந்து கிளை வாய்க்கால்கள் மூலம் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதே நிலை வரும் நாட்களில் நீடித்தால் விரைவில் அனைத்து குளங்களும் நிரம்பும் வாய்ப்புள்ளது.  கோவை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் லேசான மழையும், இடைவெளி விட்டு தூறலாகவும் நாள் முழுவதும் நீடித்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விபரம் (மில்லி மீட்டர் அளவில்): பீளமேடு 11.5, மேட்டுப்பாளையம் 5, பொள்ளாச்சி 20, பெரியநாயக்கன்பாளையம் 4, சூலூர் 5, வேளாண் பல்கலை 27, சின்கோனா 170, சின்னக்கல்லார் 166, வால்பாறை பிஏபி அலுவலகம் 136, வால்பாறை தாலுகா அலுவலகம் 135, கோவை தெற்கு 20.

நிரம்பி வழியும் சிறுவாணி


கோவையை ஒட்டிய மேற்குதொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் 878.50 மீட்டர் வரை நீரை தேக்க முடியும். அதாவது 15 மீட்டர் வரை சிறுவாணி அணையில் நீரை தேக்கலாம். கடந்த நான்காண்டுகளுக்கு முன்னர் 2014ம் ஆண்டு சிறுவாணி அணை நிரம்பியது. அதன்பின்னர் மூன்று ஆண்டுகளாக சிறுவாணி அணை நிரம்பவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தின் துவக்கம் முதலே சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் சிறுவாணி அணை நேற்று முன்தினம் நிரம்பியது. இதனை தொடர்ந்து அணையின் மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வழிந்தோடி வருகிறது. இந்த நீர் அட்டப்பாடி வழியாக பில்லூர் அணையில் கலந்து வருகிறது. நேற்று காலை எடுத்த கணக்குப்படி சிறுவாணி அணையில் 143 மில்லி மீட்டரும்  அணையின் அடிவாரத்தில் 67 மில்லி மீட்டர் மழை பதிவானது.நேற்று சிறுவாணி அணையில் இருந்து 89.04 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு வழியோர கிராமங்கள் மற்றும் கோவை மாநகராட்சி பகுதிக்கு விநியோகிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நாகப்பபடையாட்சியாரின் தியாக வரலாறு...