விவசாய நிலத்தில் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம் பேரணாம்பட்டு அருகே

பேரணாம்பட்டு, செப்.27: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரவட்லா, பாஸ்மர்பெண்டா குண்டலப்பல்லி, சாரங்கள், டி.டிமோட்டூர் போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுகள் தேடி அவ்வப்போது அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. இந்நிலையில் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டு யானை புகுந்து தேவேந்திரன் என்பவரின் நிலத்தில் புகுந்து பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை சாப்பிட்டு சேதப்படுத்தியது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி வேலூர் உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன், பேரணாம்பட்டு வனச்சரகர் சதிஷ்குமார், வனவர்கள் முரளி, இளையராஜா, மற்றும் வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் ஒற்றை காட்டு யானையை பானங்கள் விட்டு வெடித்தும் பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் சுமார் இரண்டு மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். நேற்று காலை வனத்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் ஆகியோர் காட்டு யானையால் சேதம் ஏற்படுத்தியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தொடர்ந்து யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். யானைகள் நிலத்திற்குள் கிராமத்திற்குள் வராதவாறு வனத்துறையினர் யானைக் குழிகள், மின் வேலிகள், தடுப்பு சுவர்கள் போன்றவைகளை அமைத்துத் தரும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post விவசாய நிலத்தில் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம் பேரணாம்பட்டு அருகே appeared first on Dinakaran.

Related Stories: