×

விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுரையின்படி விளையாட்டுத்துறை மேம்பாடு,சர்வதேச தரம் வாய்ந்த நவீன வகையிலான விளையாட்டு அரங்கங்கள் உருவாக்குதல்,மற்றும் வீரர், வீராங்கனைகள் நலன் குறித்த அலுவலர்களுடனான ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று (05/03/2022) சனிக்கிழமை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்க ஆய்வு கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சிவ.வீ .மெய்யநாதன் அவர்கள் கூறியதாவது:- வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் ஏழை எளிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விடியலாக, அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற நல்ல நண்பனாக, தந்தையாக, தமிழினத்தின் தலைவராக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விளங்கி வருகிறார். தமிழகத்திலுள்ள ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைக்க வேண்டும், விளையாட்டுத்துறையினை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் அனைத்து சட்டமன்ற தொகுதி வாரியாக ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள்  அமைத்திட முற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்களிலுள்ள விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விடுதிகள் நல்ல முறையில் மேம்படுத்திடவும், பராமரித்திடவும், ஊட்டசத்து மிக்க உணவுகள் வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில மற்றும்  மாவட்ட அளவில் செயல்படுகின்ற விளையாட்டு அமைப்புகள் ,சங்கங்களுடன் தொடர்பு கொண்டு முறையான பதிவு செய்திடவும், வீரர்கள் நலனுக்கான ஒத்துழைப்பினை மேற்கொள்ளவும், உரிய பயிற்சிகள் வழங்கிடவும அலுவலர்கள் நடவடிக்கை  எடுத்திட வேண்டும். கிராம மற்றும் வட்டார அளவில் பொது இடங்கள் இருந்தால் அவற்றை கண்டறிந்து பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்களிப்புடன்  சிறு விளையாட்டு மைதானங்களை உருவாக்கி , முறையான பயிற்சிகள் அளித்து  போட்டிகள் நடத்தி சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிட நடவடிக்கை எடுத்திடவேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு வீரர்கள் ,வீராங்கனைகள், விளையாட்டு நலசங்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் விளையாட்டு தொடர்பான தகவல்களை பெற்றிடவும், குறைகள் மற்றும் ஆலோசனைகள் தெரிவித்திடவும் தகவல்மையம் அமைத்திட அறிவுரை வழங்கியுள்ளார்கள்.  அதனடிப்படையில் சென்னை, நேரு விளையாட்டு அரங்க வளாகத்திலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் தகவல்மையம் உடனடியாக அமைக்கப்படவுள்ளது–எனக்கூறினார். ஆய்வு கூட்டத்தில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலர் செல்வி. அபூர்வா, இஆப. அவர்கள் ,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் .இரா. ஆனந்தகுமார் இஆப. அவர்கள், பொது மேலாளர் (பொ) திரு. இராம துரை முருகன் அவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Meiyanathan ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,
× RELATED மஞ்சப்பை திட்டம் மூலம் தமிழகத்தில்...