×

விலை வீழ்ச்சி காலத்தில் காய்கறிகளை சேமிக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி மார்க்கெட்டில், விலை வீழ்ச்சி காலங்களில், காய்கறிகளை சேமித்து வைக்க வசதியாக குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பொள்ளாச்சியில் காந்தி தினசரி மார்க்கெட், வெங்கடேசா காலனி திருவிக தினசரி மார்க்கெட், தேர்நிலை தினசரி மார்க்கெட் உள்ளிட்ட 3 காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தக்காளி, வெண்டை, பூசணி, பச்சைமிளகாய், கத்தரி, அவரைக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய், தட்டைப்பயிர் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் ஊட்டி, மேட்டுப்பாளையம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பலவகை காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கொண்டுவரப்படும் காய்கறிகள், அதன் வரத்தை பொறுத்து விலை ஏற்ற இறக்கத்துடன் அவ்வப்போது விற்பனை செய்யப்படுகிறது. இதனை உள்ளூர் பகுதி மக்கள், வியாபாரிகள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரள வியாபாரிகள் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர். சில சமயங்களில் தக்காளி, வெண்டை, பச்சைமிளகாய், பூசணி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகமாக இருக்கும்போது விலை வெகுவாக குறைகிறது. சில நேரத்தில் தக்காளி மற்றும் பூசணியின் விலை மிகவும் வீழ்ச்சியடையும் போது, அதன் விலை கட்டுப்படியாகாமல் இருப்பதால், அதனை விவசாயிகள் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். இதனால், அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.மார்க்கெட்டுக்கு காய்கறிகள் தினமும் வரத்து அதிகமாக இருப்பதால், விலை வீழ்ச்சி காலகட்டங்களில், விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளை இருப்பு வைக்க வசதியாக, குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை குளிர்பதன கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு, காந்தி தினசரி மார்க்கெட்டின் ஒரு பகுதியில், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் குளிர் பதன கிடங்கு அமைப்பதற்காக இடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி ஆய்வு நடவடிக்கையோடு அப்படியே பாதியில் நின்று போனது. அதன்பின்னர், காந்தி தினசரி மார்க்கெட் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டும், காய்கறி குளிர்பதன கிடங்கு அமைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி தினசரி மார்க்கெட்டுகள் பெரிய மார்க்கெட்டாக உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறி வகைகள் அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆனால் தக்காளி, பூசணி உள்ளிட்ட பல காய்கறிகள் சாகுபடி அதிகரிக்கும்போது அடிக்கடி விலை வீழ்ச்சியை சந்திக்கிறது. இதனால் அந்நேரத்தில் காய்கறிகளை பாதுகாத்து சேமித்து வைப்பதற்காக, பொள்ளாச்சி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு இல்லாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது. இங்கு காய்கறிகளை தேக்கி வைத்து விற்பனை செய்வதற்காக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், இதற்கான எந்த நடவடிக்கையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளாமல் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு காந்தி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ள இடம் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அதுவும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு மார்க்கெட்டில் குளிர்பதன வசதியுடன் கூடிய அரங்கு அமைக்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், காய்கறி நகரமாக விளங்கும் பொள்ளாச்சியில் இன்னும் குளிர்பதன கிடங்கு அமைக்காமல் இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை தேக்கி வைத்து, விலை வீழ்ச்சி காலகட்டங்களில், உரிய விலை கிடைப்பதற்காக குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post விலை வீழ்ச்சி காலத்தில் காய்கறிகளை சேமிக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Pollachi Market ,Dinakaran ,
× RELATED கேரளாவிலிருந்து பொள்ளாச்சி...