×

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை அமைப்பாளர்களுடன் போலீசார் ஆலோசனை

செங்கல்பட்டு, செப். 9: விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18ம் தேதியன்று நடக்க உள்ளது. இதனால், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவது இயல்பு. அப்போது, பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது குறித்து இந்து அமைப்பினர் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள், முக்கிய பிரமுகர்களின் ஆலோசனைக்கூட்டம் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாரத் தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு நகர காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் புகழ், படாளம் காவல் நிலைய ஆய்வாளர் சத்யவானி, பாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோதண்டம், தனிப்பிரிவு காவலர் ஜெகன் உள்ளிடோர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை 10 அடிக்குள் வைக்க வேண்டும். 5 நாட்களுக்குள் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். சிலை அமைப்பாளர்கள் மின் திருட்டில் ஈடுபட கூடாது. கட்சி சார்ந்த பேனர்கள் வைக்க கூடாது. விநாயகர் சிலைகளை கரைக்க டிராக்டர், மினி லாரிகளில் எடுத்து செல்ல வேண்டும். கண்டிப்பாக பட்டாசு வெடிக்க கூடாது.

மேலும், விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் தேவைபட்டால் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும், விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்ட இடத்தில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே அனுமதிக்கப்படும். கெமிக்கலால் தயாரிக்கப்பட்ட சிலைகளை வைக்க அனுமதி இல்லை. எனவே, தமிழக அரசு அறிவித்த கட்டுபாடுகளுடன் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

The post விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை அமைப்பாளர்களுடன் போலீசார் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Ganesha Chaturthi ,Chengalpattu ,Ganesha ,Dinakaran ,
× RELATED பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு...