×

விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு கட்டுப்பாட்டு அறை அமைப்பு

நாமக்கல், ஜூலை 16: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாள் மற்றும் விபரங்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்க தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இந்த திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான அலுவலர்கள் அடங்கிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கீழ் விண்ணப்பிக்கும், 21 வயது நிரம்பிய குடும்பத்தலைவிகளிடம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பெற்று எவ்வாறு மொபைல் ஆப் மூலமாக, பயோ மெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்யப்படும்.

ஆண்டுக்கு ₹2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவான நஞ்சை நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவான புஞ்சை நிலம் வைத்துள்ள குடும்பங்கள் மற்றும் ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் ஆகியவை பொருளாதார தகுதியான நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் அருகே, விண்ணப்பப் பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. முகாம் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன்னரே, நேரிடையாக குடும்ப அட்டைதாரர்கள் வீட்டிற்கே சென்று அந்த ரேஷன் கடை விற்பனையாளர், நாள், நேரம் மற்றும் குடும்ப அட்டை எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்து வழங்குவார்கள்.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த குடும்பத்தலைவியே, அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகாமில் ஆதார் அட்டை, செல்போன், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண ரசீது ஆகியவற்றுடன் சமர்ப்பித்து, கைவிரல் ரேகை மூலம் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு விண்ணப்ப பதிவு முகாமிலும், ஒரு மைய பொறுப்பு அலுவலர், விண்ணப்ப பதிவு தன்னார்வலர் இருப்பார்கள். மேலும், ஆவணங்கள் சரிபார்த்து வழங்க, ஒரு உதவி மைய தன்னார்வலரும் இருப்பார்கள்.

இந்த முகாம்களை, மண்டல அலுவலர்கள், மேற்பார்வை அலுவலர்கள் பார்வையிட்டு பொதுமக்கள் எளிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை உறுதி செய்யவார்கள். பொதுமக்கள் எளிதான வகையில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பொருட்டு, உரிய வசதிகள் செய்யப்படும். தவறான கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாள்கள் மற்றும் மேல் விபரங்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேங்களை நிவர்த்தி செய்ய, அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில், கட்டுப்பாட்டு அறை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

கலெக்டர் அலுவலகம் 1800 425 1997, நாமக்கல் தாசில்தார் அலுவலகம் 04286 – 233701, ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் 04287-222840, சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகம் 04286-271127, கொல்லிமலை தாலுகா அலுவலகம் 63792-85667, மோகனூர் தாலுகா அலுவலகம் 04286-297768, திருச்செங்கோடு தாலுகா அலுவலகம்04288-253811, பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் 04268-250099, குமாரபாளையம் தாலுகா அலுவலகம் 04288-264546. கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முகாம் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள் குறித்த விரிவான விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு கட்டுப்பாட்டு அறை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி