×

வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் முனைவோராக மாறலாம்-வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் ஆலோசனை

தோகைமலை : தோகைமலை அருகே புழுதேரி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் முனைவோராக மாறலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.கரூர் மாவட்டம், தோகைமலை அருகே புழுதேரியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக ஊட்டச்சத்து மற்றும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் தலைமை வகித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொழில்நுட்ப வல்லுநர் தமிழ்செல்வி வரவேற்புரை வழங்கினார். தேசிய வாழை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி சிவா முன்னிலை வகித்தார். இதில் கிராமப்புற பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது குழந்தைகளுக்கு துரித உணவு கொடுப்பதற்கு பதிலாக சிறு தானியங்களில் பல்வேறு வகையான உணவு பண்டங்களை, தாங்களே தயார்செய்து கொடுக்க வேண்டும். இதற்கான செய்முறை பயிற்சிகள் வேளாண் அறிவியல் மையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே இதனை பயன்படுத்திக் கொண்டு சிறு தானியங்களில் பல்வேறு வகையான உணவு பண்டங்களை தாங்களே தயார் செய்து குழந்தைகளுக்கு வழங்கலாம் என்று தெரிவித்னர்.இதேபோல் வாழையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தொழில் முனைவோராக மாறலாம் என்று கூறினர். இதில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உள்ள வசதிகளை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம். மேலும் வாழையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயிற்சிகள் மற்றும் அதற்கு தேவைப்படும் இயந்திரங்கள் அனைத்தும் குறைவான வாடகையில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உள்ளது. எனவே இந்த வசதிகளை விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற பெண்கள் பயன்படுத்திக்கொண்டு தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று தெரிவித்தனர். இதேபோல் உயிர் செறிவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் சத்துள்ள வீட்டு காய்கறி தோட்டங்கள் அமைக்கலாம். இதில் நஞ்சற்ற காய்கறிகளை பல்வேறு வகையான சுவையுள்ள உணவு வகைகளாக மாற்றி நமது குடும்பத்திற்கு வழங்கலாம். மேலும் பழங்களின் கன்றுகள், மற்றும் மரக்கன்றுகளை எப்படி பராமரிப்பது, இதன் மூலம் நமக்கு கிடைக்கும் நம்மைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். அதனைத்தொடர்ந்து ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பேசிய காட்சிகள் காணொளி காட்சி வாயிலாக ஒளிபரபப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாலதி, கவியரசு, தோகைமலை தனியார் மகளிர் கல்லூரியின் முதல்வர் புழுதேரி ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி மகாமுனி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், கரூர் வனச்சரகர், இப்கோ நிறுவன அலுவலர், தோட்டக்கலை அலுவலர் கிருத்திகா ஆகியோர் கலந்துகொண்டு ஊட்டச்சத்து மற்றும் மரம் நடுதல் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இப்கோ நிறுவனத்தின் மூலம் இலவசமாக பழக்கன்றுகள், மரகன்றுகள் மற்றும் வீட்டு தோட்டத்திற்க்கான காய்கறி விதைகள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட 110 அங்கன்வாடி பணியாளர்கள் சத்துள்ள பல்வேறு வகையான உணவு வகைகளை தயார் செய்து கருத்துக்காட்சியில் பார்வைக்கு வைத்து இருந்தனர். முகாமிற்கான ஏற்பாட்டினை வேளாண் அறிவியல் மைய அலுவலர்கள் செய்திருந்தனர். தொழில்நுட்ப வல்லுநர் தமிழ்செல்வி நன்றி கூறினார்….

The post வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் முனைவோராக மாறலாம்-வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Center for Agricultural Science ,Thokaimalai ,Purumderi Agricultural Science Center ,Agricultural Science Center ,Dinakaran ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதிகளில்...