×

சேதுபாவாசத்திரம் கடைமடையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் பட்டுப்போகும் தென்னை மரங்கள்

சேதுபாவாசத்திரம் : சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் நீர்மட்டம் குறைந்து வருவதால் தென்னை மரங்கள் பட்டுப்போய் வாடி, வதங்க துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்ததாக வாழ்க்கையின் ஜீவாதாரமாக 60,000 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்காமல் கடைமடையில் வழக்கமாக நடைபெறும் ஒருபோகம் சம்பா சாகுபடியும் செய்யவில்லை. கடந்த 3 ஆண்டுக்கு மேலாக கடைமடையில் பருவமழை பொய்த்துவிட்டது.

மழையின்றி விவசாயம் கைவிட்டு போன நிலையில் தென்னையை மட்டுமே சேதுபாவாசத்திரம் கடைமடை விவசாயிகள் நம்பியிருந்தனர். ஆனால் முழுமையாக மழை பொய்த்து போனதால்  கடந்தாண்டு இந்த பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து 80 அடியில் இருந்து நீர்மட்டம் 250 அடியை தாண்டிவிட்டது. ஒருசில ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும் கடைமடை பகுதி விவசாயிகளை மழை ஏமாற்றிவிட்டது.

இதனால் போதுமான அளவு தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.விவசாயம் கைவிட்டு போனநிலையில் ஜீவாதாரமாக கருதியிருந்த தென்னை சாகுபடியில் உள்ள தென்னை மரங்கள் பல்வேறு இடங்களில் பட்டுப்போனது.பெரும்பாலான ஆழ்குழாய் கிணறுகள் 300 முதல் 350 அடி ஆழம் வரை தான் போடப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையில் இருப்பதே நிலத்தடி நீர்மட்டம் குறைவுக்கு காரணம். மென்மேலும் நீர்மட்டம் குறைந்து வருவதால் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் வறண்டு நின்று போய்விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய வேண்டும், இல்லையேல் மேட்டூர் அணை திறந்தவுடன் ஏரி, குளங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் தான் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதுடன் தென்னை சாகுபடியையும் காப்பாற்ற முடியும் என்று கடைமடை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில்...