வாடிப்பட்டி, செப். 13: வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைக்கப்படவுள்ளது. இதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் வாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள், குவாரி உரிமையாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குவாரி அமைக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், அமைக்க கூடாது என மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
அப்போது இருதரப்பினருக்குமிடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்து, எஸ்ஐ முருகேசன் மற்றும் போலீசார் இருதரப்பினரையும் அமைதி காக்க செய்தனர். சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அனைவரின் கருத்துக்களும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பேசிய கோட்டாட்சியர், அனைவரின் கருத்துக்களையும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் முடிவுற்றது.
The post வாடிப்பட்டியில் கல் குவாரி கருத்து கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.