×

வலையபட்டி காளியம்மன்கோயில் திருவிழா

 

குளித்தலை, மே 31: வலையப்பட்டி காளியம்மன் கோயில் மூன்று நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த வலையபட்டியில் அமைந்துள்ளது காளியம்மன் கோயில். இக்கோயில் திருவிழா மூன்று நாள் நடைபெற்றது. இவ்விழாவினை ஒட்டி முதல் நாள் செவ்வாய்க்கிழமை காலை காவேரி கடம்பன்துறையில் பக்தர்கள் புனிதநீராடி அங்கிருந்து பால்குடம், தீர்த்தகுடம் மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு காளியம்மனுக்கு பால், தயிர், நெய், வெண்ணெய், இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வலையப்பட்டி காளியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்று இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் நாள் (புதன்கிழமை) காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று மாலை மாவிளக்கு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் நாள் நேற்று முளைப்பாரி எடுத்து கரகம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேளதாளத்துடன் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவுக்கான ஏற்பாட்டினை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

 

The post வலையபட்டி காளியம்மன்கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Valiyapatti Kaliamman Temple Festival ,Kulithalai ,Valiyapatti Kaliamman Temple ,Kaliamman Temple ,Valiyapatti ,Kulithalai, Karur district ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...