பிரபஞ்சப் பெருவெளியின் வடிவினனாகத் திகழ்பவன்தான் ஆடல்வல்லான் எனும் நடராஜ மூர்த்தி. அவன் திருக்கரத்திலுள்ள டமருகத்திலிருந்துதான் பஞ்ச மகாசப்தங்கள் தோன்றின. அந்த ஓசையிலிருந்து எழுத்துக்கள் பிறந்தன. அந்த எழுத்துக்களே தென் தமிழாகவும் வடமொழியாகவும் பரிணமித்தன. அதனால்தான் திருமூலர் திருமந்திரத்தில் ‘‘தமிழ்ச் சொல் வடசொல் என இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணர்தலும் ஆமே’’ – என்பார். திருநாவுக்கரசு பெருமானார் பாடிய போற்றித் திருத்தாண்டகத்தின் 7 ஆம் பாடலில் ‘‘எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி’’ எனப் பரவுகின்றார். எண், எழுத்து, சொல் இவை மூன்றும் பரமேசனின் திருவடிவம்தான்.அப்பா பெருமானே திருக்கழிப்பாலைத் திருக்கோயில் தேவாரத்தில்,‘‘விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்துவேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும்எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனார்….’’- என்றும் குறிப்பிட்டுள்ளார்.திருவாரூர் திருமூலட்டானத்துப் பதிகப் பாடல் ஒன்றில் ‘‘ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் ‘‘அணி ஆரூர் திருமூலட்டானனாரே’’ எனவும் பரவுகின்றார். இங்கு நாவுக்கரசு பெருமானார் குறிப்பிடும் ஆனத்து முன் எழுத்து என்ற சொற்றொடர் ‘ஆ’ என்ற எழுத்துக்கு முதலாகவுள்ள ‘அ’ என்பதில் தொடங்கி ‘ன’ என்ற எழுத்துக்களுமே ஆரூர் பெருமானின் திருவடிவம்தான் என்பதாகும்.பிரபஞ்ச வடிவமாகத் திகழும் நடேச மூர்த்தியின் சதாசிவ கோலம்தான் ஆகாச லிங்கமாகும். இவ்வடிவினை நமக்குக் காட்டவே ஆரூர் திருக்கோயிலில் ஒரு திருவடிவத்தினை நம் முன்னோர்கள் பிரதிட்டை செய்துள்ளனர். அக்கோயிலில் உள்ள கமலாம்பாள் ஆலயத்தின் திருச்சுற்றில்தான் அப்பெருமான் காட்சி நல்குகின்றார். கோமுகத்துடன் கூடிய பீடம். அதன்மேல் தீச்சுடர்களுடன் கூடிய பிரபாவளி. அதன் நடுவே வெற்றிடமாக லிங்க உருவம். அவர்தம் பாதத்திலும் உச்சியிலும் அயர்ந்த தாமரை மலர்கள். பிரபாவளியில் ‘அ’ என்ற எழுத்தில் தொடங்கி வரிசையாக அகர வரிசை எழுத்துக்கள் கல்வெட்டுப் பதிவாகக் காட்சி நல்குகின்றன. அரிய இக்காட்சியில் உருவமற்ற பரவெளியாக சிவபெருமான் திகழ, எழுத்துக்களும், சோதிச் சுடர்களும் அவர்தம் வடிவத்தினை நமக்குக் காட்டி நிற்கின்றன. தில்லைப் பொன்னம் பலத்தில் நாம் காண்கின்ற ‘‘ரகஸ்யம்’ எனப் பெறும் பரவெளியயே இங்கு இலிங்கமாக நாம் காண்கிறோம்.தமிழகத்திலுள்ள சிவாலயங்களின் வரிசையில் ஆதிபுரி என்ற பெயர் திருவொற்றியூர் சிவாலயத்திற்கு மட்டுமே உரியதாகும். மிகத் தொன்மையான பதி அதுவாகும். இவ்வாலயத்திலுள்ள பல்லவ மன்னன் அபராஜிதவர்மனின் கல்வெட்டு (காலம் கி.பி. 907) இவ்வூரினை ஒற்றி மூதூர் எனக் குறிக்கின்றது. பராந்தக சோழனின் கல்வெட்டோ (கிபி. 945) ஒற்றியூரினை ஆதி கிராமம் எனக் கூறுகின்றது. பழமைக்கும் பழமையான பதி இதுவாகும். இவ்வாலயத்து ஈசனின் திருநாமங்களாக, ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம் பக்க நாதர், தியோகேசர். எழுத்தறியும் பெருமாள் என்ற பெயர்கள் வழக்கில் உள்ளன. எழுத்தறியும் பெருமாள் என்ற இப்பெயருக்கு ஒரு தொன்ம வரலாறு உண்டு. அதனை அறியும் முன்பு எழுத்துக்கள் எழுதும் மரபில் மேற்கொள்ளப் பெறும் ஒருவகை நெறிதனை சான்றுகளோடு காண்போம்.தொடர்ந்து எழுதும்போது ஒரு சொல்லில் உள்ள ஒரு எழுத்தோ அல்லது ஒரு வரியில் உள்ள ஒரு சொல்லோ, சில சொற்களோ விடுபட்டு போகுமாயின், மீண்டும் படிக்கும்போது அவற்றைக் கண்டு விடுபட்ட இடத்திற்கு மேலாக உரியவற்றை சிறிதாக எழுதி சேர்ப்பது நம் எழுத்தியல் மரபாகும். அவ்வாறு எழுதுவதை வரி பிளந்து எழுதுதல் என்பர்.இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதப் பெற்று வந்த தமிழ்க் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள் போன்ற ஆவணங்களில் வரி பிளந்து எழுதியதற்கான சான்றுகளை இன்று நாம் காணமுடிகிறது. திருவாப்போக்கி எனும் தேவாரத்தலமான ஐயர்மலை உச்சியில் திருக்கோயிலுக்கு மறுபுறம் இயற்கையான குகைத் தளம் ஒன்றுள்ளது. அங்கு நோன்பிருந்த ஒரு சமணத் துறவிக்காக பனைதுறை எனும் ஊரினைச் சார்ந்த வெஸன் என்பான். ஒரு கல்படுக்கைச் செய்துள்ளான். அதன் அருகில் ‘‘பனைதுறை வெஸன் அதட் அனம்’’ என்ற 2100 ஆண்டு பழமையுடைய தமிழ் பொறிப்பை அங்கு இடம் பெறச் செய்துள்ளான். அக் கல்வெட்டு வரியில் பனைதுறை என்ற சொல்லில் உள்ள ‘றை’ என்ற எழுத்தை முதலில் எழுதும் போது விட்டுவிட்டு பின்பு அடுத்த சொல்லான வெஸன் என்பதற்கு இடையே அந்த ‘றை’ என்ற எழுத்தை எழுத இடம் போதவில்லை என்பதால் ‘து’ என்ற எழுத்துக்கு மேலாக சிறிய எழுத்தில் ‘றை’ என எழுதிச் சேர்ந்துள்ளனர். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரி பிளப்பாகும்.செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள திருமுக்கூடல் என்ற ஊரில் உள்ள விஷ்ணு ஆலயத்தில் வீராஜேத்திர சோழனின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புடைய கல்வெட்டு சாசனமொன்றுள்ளது. அதில் மன்னனுடைய ஆணையை நிறைவேற்றிய அதிகாரியின் பெயர் கல்வெட்டு வெட்டும்போது விடுபட்டுப் போயிற்று. பின்பு அதனை அறிந்து அந்த வரிக்கும், கீழாகவுள்ள வரிக்கும் இடையில் ‘‘செம்பியன் மிழலை வேளானும்” என்ற சொற்றொடரை வரி பிளந்து எழுதியிருக்கிறார்கள். பொதுவாக நாம் வரி பிளந்து எழுதும்போது வரிக்கு மேலாகவே எழுதுவோம். ஆனால், இங்கு வரிக்குக் கீழாக எழுதப்பெற்றுள்ளது.தஞ்சை மராட்டிய அரசர் துளஜா மகாராஜா என்பவர் இராமேஸ்வரம் இராமநாத சுவாமியார்க்காக அளித்ததான செப்பேட்டில் அளகாபுரி என்பதை அளபுரி என எழுதி விட்டு பின்பு அள புரி என்ற இருபகுதிகளுக்கு இடையே கீழாக சிறிய எழுத்தில் கா என்ற எழுத்தினைப் பதிவு செய்து அளகாபுரி என முழுமை செய்திருக்கிறார்கள். இதேபோன்று பல தமிழ் ஓலைச்சுவடிகளில் விடுபட்ட சொற்களை வரி பிளப்பாக வரிக்குக் கீழாகவே எழுதியிருப்பாத காண முடிகின்றது. ஆனால், நாம் வரி பிளந்து எழுதும் போது விடுபட்ட வரிக்கு மேலாகவே எழுதிவருகிறோம்.வரி பிளந்து சொற்றொடர் எழுதுவதில் எல்லோருக்கும் வழி காட்டியாகத் திகழ்ந்தவன் திருவொற்றியூர் ஈசனான எழுத்தறியும் பெருமாளேயாவான். சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்து திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் தொண்டை வள நாட்டுச் சிறப்பினைக் கூறும்போது ஒற்றியூரின் ஒரு தனிப் பெருமையை பதிவு செய்துள்ளார்.‘‘மருட் கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியைநெருக்கி முன் திருவொற்றியூர் நீங்கவென்றெழுதும் ஒருத்தர் தம் பெருங்கோயில்……’’(பா.39)- என்று கூறியுள்ளதோடு, ஏயர் கோன் கலிக்காம நாயனார் புராணத்தில்,‘‘ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கள் என்ன எழுத்தறியும் நாட்டமலரும் திருநுதலார்…..’’(பா. 204)- என்று கூறி மீண்டும் திருவொற்றியூர் பெருமான் செய்த செயல் ஒன்றினை நமக்குக் காட்டி யுள்ளார். இவை தவிர திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தின் 335 ஆம் பாடலில், நாவுக்கரசு பெருமான் திருவொற்றியூர் சென்று வழிபட்டதைக் கூறும் இடத்தில்,‘‘எழுதாத மறை அளித்த எழுத்தறியும் பெருமானைத்தொழுதார்வ முற நிலத்தில் தோய்ந் தெழுந்(தார்)…(335) – எனவும் குறிப்பிட்டுள்ளார்.சேக்கிழார் இங்கு சுட்டுவது என்ன வரலாறு என்பதனை தலபுராணமும், தொன்ம நூல்களும் உரைக்கின்றன. மாந்தாதா என்ற அரசன் (இவனை சோழர் செப்பேடுகள் சோழர் குல முன்னோனாக குறிக்கின்றன) ஒருவன் நீண்ட வயது பெற்று உடல் தளர்ந்து நடுக்கமும் பிணியும் மேலிட்டு வருத்தமுற்று இருந்தான். இந்நலிவுகளால் மேலும் துன்பமுறாமல் எளிதில் இறக்கும் வகையாது என நெருங்கியவர்களிடம் வினவினான். அவர்கள் நீ செய்து வரும் சிவ புண்ணிய காரியங்களை குறைத்தால் விரைவில் உனக்கு பலன் கிட்டும் என்றனர். உடனே மாந்தாதா தன் கணக்கனை அழைத்து தான் முன்பு விதித்து நடந்து வந்த சிவன் கோயில் படித்தரங்களை பாதியாகக் குறைத்துக் கணக்கு எழுதி வரும்படி செய்து அதில் கையெழுத்தும் இட்டான். மறுநாள் சென்று படித்தரங்கள் பெறும் கோயில்களின் பட்டியலில் வரி பிளந்து ‘‘ஒற்றியூர் நீங்கலாக’’ என்று எழுதப் பெற்றிருந்தது. அது கண்ட அரசன் இது ஒற்றியூர் ஈசனின் செயலே என உணர்ந்து அப்பெருமானுக்கு அளப்பரியன செய்து, முதுமையின் வருத்தங்கள் இன்றி வாழ்ந்து சிவகதி பெற்றான்.ஈசனே வரி பிளந்து எழுதியதால் அவரை எழுத்தறியும் பெருமான் என அழைக்கலாயினர். எழுத்தின் வடிவமாகத் திகழும் பெருமானார் தாமே வரி பிளந்து எழுதிய இத்திருவிளையாடலை ஆதிபுரிக்காக மட்டுமே செய்துள்ளார்.முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்…
The post வரி பிளந்து எழுதிய ஆதிபுரி ஈசன் appeared first on Dinakaran.