×

வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் நவீனமயமாக மாற்றப்படும் தி.நகர் பேருந்து நிலையம்: விரைவில் பணிகள் தொடக்கம்

 

சென்னை: தி.நகர் பேருந்து நிலையத்தை வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் நவீனமயமாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
சென்னையில் துணிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அதிகளவில் அமைந்துள்ள இடம் தி.நகர். இதனால், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். குறிப்பாக, பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலாக காணப்படும். பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் பொதுமக்கள், பேருந்து மற்றும் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

இவர்களின் வசதிக்காக, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு, மயிலாப்பூர், திருவான்மியூர், பூந்தமல்லி, தாம்பரம், வடபழனி என சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 500 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி.நகர் பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், இந்த பேருந்து நிலையத்தை நவீனமயமாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. அதாவது, வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் நவீனப்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய பேருந்து நிலையங்களை மேம்படுத்த டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டமாக தி.நகர், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.நகர் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகளை தொடங்கும் வரை அங்கு பெரிய மாற்றம் செய்ய முடியாது என்றும், அதேநேரத்தில் அடிப்படை வசதிகளை போதிய அளவில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

The post வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் நவீனமயமாக மாற்றப்படும் தி.நகர் பேருந்து நிலையம்: விரைவில் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagar Bus Station ,Chennai ,T. The Corporation ,The. Nagar Bus Station ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...