×

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் நரசிம்மர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ளது சப்தகிரி மலை. சப்தகிரி என்றால் ஏழு மலை என்றும் சமஸ்கிருதத்தில்  “மலை செல்வம்” என்றும் பொருள்படும். இங்கு சுவாமி  லட்சுமி நரசிம்மர் என்ற திருநாமத்தோடும், தாயார் கனகவள்ளி என்ற திருநாமத்தோடு வீற்றிருந்து பக்தர்களின் இன்னல்களை தீர்த்து வருகின்றனர். சுயம்பு மூர்த்தியான நரசிம்மர் தெற்கே திருவண்ணாமலையை பார்த்து அமர்ந்துள்ளார். சுவாமி பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு  செவிசாய்த்து அருளை வாரி வழங்கி வருகிறார்.  தல வரலாறு: புராண காலத்தில் மலை உடைக்கும் தொழிலாளர் குழு சப்தகிரி மலையை உடைத்துக்கொண்டு இருந்தபோது ஒரு தொழிலாளி  உடைத்த கல்லில் இருந்து ரத்தம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் மலையை விட்டு இறங்கி  விட்டனர்.

அன்றிரவு சுவாமி நரசிம்மர்,  பக்தர்  ஒருவரின் கனவில் வந்து ‘நான் சப்தகிரி மலையில் நரசிம்மர் என்ற திருநாமத்தோடு   சாந்த மூர்த்தியாக எழுந்தருளி உள்ளேன்’ எனக்கூறியுள்ளார். உடனே அந்த பக்தர், இந்த தகவலை கிராம மக்களிடம் தெரிவித்தார். இதை கேட்ட கிராம மக்கள் அனைவரும் மலைக்கு சென்று பார்த்தபோது, கனவில் கூறியபடி சுவாமி காட்சியளித்தார். நரசிம்ம சுவாமியை பார்த்து ஆனந்தப்பட்ட கிராம மக்கள் ஒன்றுகூடி சுவாமிக்கும், அருகே தாயார் மகாலட்சுமிக்கும் தனித்தனியாக கோயிலை கட்டினர்.  சகோதரர்களான குலஸ்தியமகரிஷி,  புலஸ்திய மகரிஷி என்ற 2 ரிஷிகளும்  தீவிர பெருமாள் பக்தர்கள். இவர்களது தவத்திற்கு ஈர்க்கப்பட்ட நரசிம்மர், 2 ரிஷிகளுக்கும் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். பழத்தை ஒருவர் மட்டும் சாப்பிடவேண்டும் என்றார்.

அந்த மாம்பழத்தை யார் சாப்பிடுவது என சகோதரர்களுக்கு இடையே சண்டை வந்தது.மாம்பழத்தை தனக்கே கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் புலஸ்திய மகரிஷி,   சகோதரர் குலஸ்தியரிஷியின் கைகளை வெட்டிவிடுகிறார். கைகள் இழந்த நிலையிலும்  மனம் தளராத குலஸ்தியரிஷி, செய்யாற்றில் நீராடி,  சப்தகிரி மலையை 48 நாட்கள் வலம் வந்து சுவாமியை வழிபட்டார். 48ம் நாள் முடிவில் குலஸ்திய மகரிஷி மீண்டும் 2 கைகளும் திரும்ப பெற்றார். இறைவனின் லீலையை நினைத்து புலஸ்திய முனிவரும், பொதுமக்களும் பரவசம் அடைந்தனர்.  ஒரு சுவாமி, புலஸ்திய மகரிஷியின் கனவில் தோன்றி உற்சவர் சிலை இருக்கும் இடத்தை தெரியப்படுத்தினார். அதேபோல் புலஸ்திய மகரிஷி, கரபூண்டி என்ற இடத்தில் செய்யாற்றில் இருந்த உற்சவ மூர்த்தியை மீட்டு மலையின் கீழே பிரதிஷ்டை செய்தார். இதையடுத்து விஜய நகர மன்னர்களின் ஆட்சி காலத்தில் இக்கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது.  ருக்குமணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமிக்கு தனி கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
இம்மலையில் அன்ன குகை எனும் ஒரு குகை உள்ளது.

இக்குகையில் அச்சுததாசர்ஹரிதாஸ்,  ஞானாந்த  சுவாமிகள் மற்றும் சித்தர் வினோபா ஆகியோர்  தியானம் செய்துள்ளனர். மலையில் பிரம்ம தீர்த்தமும், மலை அடிவாரத்தில் புலஸ்தியர்  தீர்த்தமும் உள்ளது. சிறிய திருவடியான ஆஞ்சநேயர், மலையடிவாரத்தில் அருள்பாலிக்கிறார்.
இம்மலையில் 2 கழுகுகள் எப்போது சுற்றி பறந்த வண்ணம் இருக்கும். குலஸ்தியர், புலஸ்திய மகரிஷிகள் இருவருமே கழுகுகளாய் மாறி இறைவனை சுற்றுவதாக ஐதீகம். மேலும் 2 சகோதரர்களும் புலஸ்தியர் மற்றும் குலஸ்தியர் மலையாகவும் உள்ளனர். இந்த மலைகள் சப்தகிரிக்கு  எதிரே உள்ளது. இதனை எதிர் சப்தகிரி என அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து சப்தகிரி மலை அடிவாரத்திற்கு ஆட்டோ வசதி உள்ளது. அங்கிருந்து 840 படிகள் ஏறி மலை உச்சியில் உள்ள கோயிலை அடையலாம்.


Tags : Narasimha ,Swayambu Murthy ,
× RELATED பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு