×

வங்கதேசத்தினர் ஊடுருவல்: தனிப்படை அமைத்து விசாரணை

திருப்பூர், செப்.29: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வங்கதேசத்தினர் அதிகளவு ஊடுருவி இருக்கலாம் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் தனிப்படை அமைக்கப்படும் எனவும் போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகரில் கடந்த 24ம் தேதி மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றித் திறந்த 6 வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக திருப்பூர் அனுப்பர்பாளையம் வெங்கமேடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்த வங்கதேசத்தினர் மற்றும் அவர்களது நண்பர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

வெங்கமேடு பகுதியில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்த தன்வீர் அகமது (28) 3 ஆண்டுகளுக்கு முன்பாக வங்கதேசத்தில் தனது உறவினரை கொலை செய்து விட்டு மேற்குவங்கம் வழியாக தமிழகம் வந்து பதுங்கி இருந்ததும், கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக குடும்பத்துடன் திருப்பூரில் குடியேறி போலி ஆதார் கார்டுகளை பெற்று பனியன் நிறுவனத்தில் குடும்பத்துடன் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இவர்களுக்கு ஆதார் கார்டு எடுத்து கொடுத்ததாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு எழுதி கொடுத்து இடைத்தரகராக இருந்த மாரிமுத்து (42) என்பவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினரின் விசாரணையின் தொடர்ச்சியாக வெங்கமேடு பகுதியில் பதுங்கி இருந்த கொலை குற்றம் சாட்டப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து திருப்பூர் மாநகரில் வங்கதேசத்தினர் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல் வங்கதேசத்தினருக்கு ஆதார் கார்டு எடுத்து கொடுத்த மாரிமுத்து என்பவர் இதற்கு முன்பாகவும் ஏராளமான நபர்களுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை போலியாக பெற்றுத் தந்துள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை சேர்க்கும் போது ஆதார் கார்டு மட்டுமல்லாது வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டை சேர்ந்தவர் என குறிப்பிட்டால் அதற்கான ஆவணங்களையும் முறையாக சரிபார்த்து வேலைக்கு சேர்க்க வேண்டும். ஏஜென்சிகள் மூலமாக ஆட்களை பணிக்கு அமர்த்தினாலும் அவர்களுக்கான ஆவணங்களை பெற்று சரி பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனை பின்னலாடை நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் சந்தேகப்படும்படியாக யாரேனும் பணிக்கு தங்களை அணுகினால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். ஒரு சில வட மாநில தொழிலாளர்கள் பணிக்கு வரும்போது தங்கள் சொந்த ஊர்களில் இருந்து கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை கொண்டு வருகின்றனர். அவர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது விற்பனைக்காகவும் வைத்திருந்தது கண்டறியப்பட்டு கைது கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் தனிப்படை அமைத்தும் சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள் கூறுகையில்,“வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து போலீசார் தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் உரிய விசாரணைக்கு பின்னரே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறோம். மேலும் இந்த வங்கதேசத்தினர் ஊடுருவல்களை ஒன்றிய அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் வங்கதேசத்தினரை பார்டரிலேயே தடுத்து நிறுத்த முடியும். அதற்கு ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக காவல்துறையும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் தொடர்பில் உள்ளார்கள். அவர்கள் அறிவுறுத்தலின்படி பணிக்கு சேருபவர்களின் ஆவணங்களை முறையாக கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

The post வங்கதேசத்தினர் ஊடுருவல்: தனிப்படை அமைத்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Deputy Commissioner ,Sujata ,Bangladeshis ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு...