×

லாரி கவிழ்ந்து பால் கொட்டிய விவகாரம் தொழுவத்தில் அடைத்த மாடுகளை பிடித்துச்சென்ற 3 பெண்கள் கைது: போலீசார் அதிரடி

 

சென்னை, செப். 11: சாலையில் மாடுகள் படுத்து கிடந்ததால் லாரி கவிழ்ந்து பால் கொட்டிய விவகாரத்தில் தொழுவத்தில் பிடித்து அடைத்து வைத்த மாடுகளை அவிழ்த்து சென்ற 3 பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொரட்டூர் பால் பண்ணையில் இருந்து ஆவடி, வெள்ளானூர் தனியார் கல்லூரிக்கு ஆவின் பால் ஏற்றிக்கொண்டு கடந்த 7ம் தேதி லாரி ஒன்று புறப்பட்டது. அப்போது, திருமுல்லைவாயல், எஸ்.எம். நகர் காவலர் குடியிருப்பு சாலையில், அதிகாலை 2 மணி அளவில் சாலையில் படுத்துக்கிடந்த மாடுகள் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென லாரியை திருப்பி உள்ளார்.

அப்போது, நிலை தடுமாறிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில், வண்டியில் கொண்டு சென்ற 80 லிட்டர் பால் சாலையில் கொட்டி வீணானது. விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன் எதிரொலியாக, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரிந்த மாடுகளை பிடிக்க ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் உதவியுடன் எச்.வி.எப்., சாலையில் 3 மாடுகள் மற்றும் அண்ணனூர் 60 அடி சாலையில் 2 மாடுகளை பிடித்து சென்றனர்.

இதில், பிடித்து சென்ற மாடுகளை திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், பசுமை பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் நாராயணன், ஸ்ரீராம், செந்தில், வழக்கறிஞர் லோகேந்திரன், மகாலட்சுமி, உமா மற்றும் தேவி ஆகியோர் தொழுவத்தில் கட்டி வைத்திருந்த மாடுகளை அத்துமீறி உள்ளே நுழைந்து பிடித்து சென்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இருப்பினும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதன் பின், மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், காவல் ஆணையர் சங்கரிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து திருமுல்லைவாயல் போலீசார், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவர்களை தேடி வந்த நிலையில் நேற்று காலை திருமுல்லைவாயல், சோழன் நகர், முத்துமாரி அம்மன் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி (30), உமா (37) மற்றும் தேவி (50) ஆகியோரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post லாரி கவிழ்ந்து பால் கொட்டிய விவகாரம் தொழுவத்தில் அடைத்த மாடுகளை பிடித்துச்சென்ற 3 பெண்கள் கைது: போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட...