×

லாரியை வழிமறித்த காட்டு யானை வனத்துறையினர் விரட்ட முயன்றதால் கரும்பு கட்டுகளை தூக்கி கொண்டு ஓடிய காட்டு யானை

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை  காட்டு யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யானையை வனத்துறையினர் விரட்ட முயன்றதால் கரும்பு கட்டுகளை தூக்கி கொண்டு ஓடியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது  வனப்பகுதி வழியாக செல்லும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். கடந்த சில நாட்களாக சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் வழி மறிப்பதோடு லாரியிலிருந்து கரும்புத் துண்டுகளை பறித்து தின்றபடி அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று காலை தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.  தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்றபோது குட்டியுடன் சாலைக்கு வந்த காட்டு யானை, கரும்பு லாரியை வழிமறித்தது. அப்போது, லாரி ஓட்டுநர் லாரியை முன்நோக்கி நகர்த்த முயன்றபோது லாரியை செல்லவிடாமல் காட்டுயானை தடுத்து நிறுத்தியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியில் இருந்த கரும்பு கட்டுகளை தும்பிக்கையால் பறித்து தின்று கொண்டிருந்த காட்டு யானையை சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் விரட்ட முயன்றபோது கரும்புகளை தும்பிக்கையால் தூக்கியபடி வனப்பகுதிக்குள் ஓடியது. அதன்பின், வாகனங்கள் புறப்பட்டு சென்றன. தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் காட்டு யானையால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், வாகனங்களை வழி மறிக்கும் காட்டு யானையை சாலைக்கு வர விடாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….

The post லாரியை வழிமறித்த காட்டு யானை வனத்துறையினர் விரட்ட முயன்றதால் கரும்பு கட்டுகளை தூக்கி கொண்டு ஓடிய காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Sathyamangalam-Mysore National Highway ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் படுகாயம்..!!