×

ரேஷன் கடையில் மினி காஸ் சிலிண்டர்கள் விற்பனை அதிகாரிகள் தகவல் வேலுர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள

வேலூர், ஜூன் 23: வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரேஷன் கடையில் மினி காஸ் சிலிண்டர்கள் விற்பனை தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,778 நியாய விலைக் கடைகளில் 33,377 நியாயவிலைக் கடைகள் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகின்றன். கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம் 2 கோடியே 2 லட்சத்து 45 ஆயிரத்து 357 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான தரச்சானறிதழ், உணவுபொருட்கள் இருப்பு வைப்பதற்கு தேவையான சான்றிதழ், ஆகியவை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாய விலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில், பரீட்சார்த்த முறையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 5 கிலோ மற்றும் 2 கிலோ மினி காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 6ம் தேதி முதல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மினி காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 620 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் கிராமப்புற ரேஷன் கடைகளை தவிர்த்து நகரப்புற பகுதிகளில் உள்ள முதற்கட்டமாக 5 ரேஷன் கடைகளில் 2 மற்றும் 5 கிலோ மினி காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடி, வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே மற்றும் தொரப்பாடி, சிஎம்சி, சத்துவாச்சாரி ஆவின் பின்புறம் உள்ள ரேஷன் கடைகளில் மினி காஸ் சிலிண்டர் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மாதிரி ரேஷன் கடையில் மினி காஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு அரசின் மூலம் பொதுமக்களுக்கு மினி காஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. 2 கிலோ கொண்ட சிலிண்டர் டெபாசிட் தொகையுடன் சேர்த்து ₹990க்கும், 5 கிலோ சிலிண்டர் 1,590க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலி சிலிண்டர் திரும்பி வழங்கினால் 2 கிலோ சிலிண்டருக்கு ₹281 போக மீதி தொகை திருப்பி வழங்கப்படும். அதேபோல், 5 கிலோவிற்கு ₹646 போக மீதி தொகை திருப்பி வழங்கப்படும். இந்த சிலிண்டர்களை பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள ரேஷன் கடைகளில் மினி சிலிண்டர்கள் விற்பனை விரைவில் தொடங்கப்படும்’ என்றனர்.

The post ரேஷன் கடையில் மினி காஸ் சிலிண்டர்கள் விற்பனை அதிகாரிகள் தகவல் வேலுர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள appeared first on Dinakaran.

Tags : Vellore Collector ,Vellore ,Shop ,Vellore Collector's ,Dinakaran ,
× RELATED ₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை...