×

ரூ1.77 கோடி வாடகை மற்றும் சொத்து வரி பாக்கி 40 கடைகள், தியேட்டருக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

தண்டையார்பேட்டை: சென்னை அண்ணா சாலையில் ரூ22.81 லட்சம் சொத்து வரி பாக்கி செலுத்தாத தியேட்டர், பாரிமுனை மற்றும் வேப்பேரி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் ரூ1.5 கோடி வாடகை பாக்கி செலுத்தாத 40 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மற்றும் தொழில் உரிமம் பெறாமல் கடை நடத்துபவர்கள் மற்றும் மாநகராட்சி கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்தாதவர்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, இதுதொடர்பாக அதிகாரிகள் வார்டு வாரியாக ஆய்வு நடத்தி, வாடகை மற்றும் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மற்றும் தொழில் உரிமம் பெறாமல் கடை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்துக்கு உட்பட்ட 49 முதல் 63வது வார்டு வரை உள்ள பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பாரிமுனை, எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் கடைகள் ஆகிவற்றில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை அண்ணா சாலையில் உள்ள தியேட்டர் நிர்வாகம் ரூ22.81 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்திருப்பதும், பாரிமுனை மற்றும் வேப்பேரி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் செயல்படும் 40 கடைகள் ரூ1.5 கோடி வாடகை பாக்கி செலுத்தாததும் தெரிந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும், சம்பந்தப்பட்ட நபர்கள் வாடகை பாக்கி மற்றும் சொத்து வரியை செலுத்த முன்வரவில்லை. இந்த நிலையில், மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்கள் நிதிபதி ரங்கராஜன், முருகேசன், வரி மதிப்பீட்டாளர் ரஹமத்துல்லா, உரிமம் ஆய்வாளர்கள் மணிகண்டன், செரீப், பத்மநாபன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அண்ணாசாலையில் உள்ள தியேட்டர், பாரிமுனை மற்றும் வேப்பேரியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் செயல்படும் 40 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். மேலும், வாடகை மற்றும் வரி பாக்கி தொடர்பாக கடைகள் மற்றும் தியேட்டர் முன்பு நோட்டீஸ் ஒட்டினர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள், வாடகை மற்றும் வரி பாக்கியை மாநகராட்சி வருவாய் துறைக்கு செலுத்தினால், கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post ரூ1.77 கோடி வாடகை மற்றும் சொத்து வரி பாக்கி 40 கடைகள், தியேட்டருக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Anna Road ,Barimuna ,Vepperi ,Dinakaran ,
× RELATED பலத்த காற்றுடன் மழை தகர ஷீட் பறந்ததில் 2 பேர் படுகாயம்