×

ரூ.150 கோடி வரைவு திட்டம் குறித்து ஆய்வு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அர்ச்சகர்களுக்கு ‘ஷிப்ட்’ முறையில் பணி ஒதுக்கீடு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் இடையூறு இல்லாத வகையில் தரிசனம் செய்ய வசதியாக அர்ச்சகர்களுக்கு ‘ஷிப்ட்’ முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள், அன்னதான கூடம், சமையல் அறை, பஞ்சாமிர்தம் தயார் செய்யும் அறை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளை மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது கோயிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு ரூ.150 கோடி செலவில் தனியார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் நிதியோடு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும் மற்றும் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கோயிலில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த மாதம் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் சில மாற்றங்களை மேற்கொண்டு புதிய வரைவு திட்டம் தயார் செய்யும் பணியில் திருக்கோயில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் குழு ஈடுபட்டு வருகிறது. வரைவு திட்ட அறிக்கை இறுதியானவுடன் முதலமைச்சரை சந்தித்து அவரது ஆலோசனை பெற்று வெகுவிரைவில் திருக்கோயில் திருப்பணிகள் துவங்கப்படும். பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென்ற தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். துறை செயலாளருடன் ஆலோசித்து விரைவில் அதனை நிறைவேற்றி தர ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் திருக்கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், தரிசனத்திற்கு பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதாகவும், விஐபிக்கள் என்று வருபவர்களை முன்கூட்டியே தரிசனத்திற்கு அனுமதிப்பதால் பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு காத்திருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். விஐபி தரிசன முறையை கட்டுப்படுத்த நாளை (15ம் தேதி) கூட்டம் நடைபெற உள்ளது.ஒரே நேரத்தில் சுமார் 200 அர்ச்சகர்கள் பணியில் கூட்டமாக இருப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே போதிய அளவு அர்ச்சகர்கள் இருப்பதால் சுழற்சி முறையில் அவர்களுக்கு பணிகள் வழங்குவது தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக கலந்தாலோசித்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் விரைவில் செய்யப்படும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட முழுநேர அன்னதான திட்டத்தை நாளை (16ம் தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்து சமய அறநிலையத்துறைக்கு தேவையான திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து முதல்வரே திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று 124 நாட்களிலேயே 300 கோயில்களுக்கு திருப்பணிகள் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளாமல் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். திருச்செந்தூரில் ஏற்கனவே செயல்படாமல் மூடப்பட்டுள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு அதனை புனரமைத்து நவீன அர்ச்சகர் பயிற்சி பள்ளியாக மாற்றி தகுதியான ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்தப்படும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் எந்தளவுக்கு தானம் செய்ய முன்வருகிறார்கள் என்பதை கணக்கெடுத்து கோசாலை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்  உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய்  நாராயணன், திருச்செந்தூர் ஆர்டிஓ கோகிலா, ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், கோயில் இணை  ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வராஜ், துறை உதவி ஆணையர் ரோஜாலி, சமூக  பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராமச்சந்திரன், பேரூராட்சி நிர்வாக  அதிகாரி இப்ராகிம்ஷா, சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், கோயில்  செயற்பொறியாளர் முருகன், இளநிலை பொறியாளர் சந்தான கிருஷ்ணன், மேலாளர்  சிவநாதன், கோயில் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், திமுக மாநில மாணவரணி துணை  செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளர்  வாள்சுடலை, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், மாவட்ட அவைத்தலைவர்  அருணாசலம், ஒன்றிய அவைத்தலைவர் பரிசமுத்து, மாவட்ட திமுக துணை  அமைப்பாளர்கள் சுதாகர், அருணகிரி, முருகன், செந்தில்குமார்,  ஆனந்தராமச்சந்திரன், வீரமணி, மாதவன், பொன்முருகேசன், வக்கீல் கிருபா,  கோமதிநாயகம், ராஜமோகன், நம்பி, சுரேஷ், சிவலூர் ரவி, காங். பொதுக்குழு  உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், டிசிடபுள்யு சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்த அமைச்சர் சேகர்பாபு, தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் சொத்துகளை யார் அபகரித்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கோயில் வளர்ச்சியை சீரழிவுப்படுத்தும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு துறை சார்ந்து அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கோயில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பின் மூலம் கோயில்களில் வருமானம் குறையும். பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றதொரு புகாரும் எழுந்தது. இதன் அடிப்படையில் திருக்கோயில் பணியாளர்களுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கோயில்களில் காது குத்துவதற்கு முறைகேடாக அதிக பணம் வசூலிப்பது குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு துறை ரீதியான குழுவின் மூலம் ஆய்வு நடத்தப்படும். அதன்படி யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு பக்தர்கள் தங்களது காணிக்கையை நிறைவாக இறைவனுக்கு செலுத்துவதற்கு இந்துசமய அறநிலையத்துறை வழி காணும், என்றார்….

The post ரூ.150 கோடி வரைவு திட்டம் குறித்து ஆய்வு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அர்ச்சகர்களுக்கு ‘ஷிப்ட்’ முறையில் பணி ஒதுக்கீடு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Subramania ,Swamy Temple ,Minister ,Shekharbabu ,Tiruchendur Subramania Swamy Temple ,
× RELATED திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது