×

ரூ.100 கோடியில் நவீனப்படுத்த நடவடிக்கை உலகத்தரத்தில் காசிமேடு துறைமுகம்: பணிகள் விறுவிறு

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.100 கோடியில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றி நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் 1984ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த துறைமுகத்தில் 23 சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு 9 வார்பு பகுதி உள்ளது. 200க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், 1,200 விசைப்படகுகள், 2,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடக்கிறது. தினமும் 1,000 டன் மீன் வரத்து மூலம் ரூ.50 கோடி வர்த்தகம் நடக்கிறது. சென்னை துறைமுகத்தின் கீழ் காசிமேடு மீன்பிடி துறைமுக மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு காசிமேடு துறைமுகத்தை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்கிறது. துறைமுகத்தில் உள்ள காலி இடங்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை டெண்டர் மூலம் வாடகைக்கு விடப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு பின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அந்த இடம் மீண்டும் வாடகைக்கு விடப்படும். இதன் மூலம் அரசு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வந்தது.இந்நிலையில், 85 ஏக்கர் இடத்தில் 50 ஏக்கர் அளவிற்குரிய நிலங்கள், மீனவர்கள் சங்கங்கள் என்ற பெயரில் கட்டிடங்களாகவும், ஷெட்டுகளாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும் சிற்றுண்டி, பெட்டி கடைகளும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடித் துறைமுகம் மட்டும் சென்னை துறைமுக கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ரூ.15 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. வருமானம் கிடைத்தபோதும் உள்கட்டமைப்பை முறைப்படுத்ததால், இங்கு கிடைக்கும் மீன்களை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.இங்கு, ஆயிரம் பெரிய விசைப்படகுகளும், மூன்றாயிரம் பைபர் படகுகளும், நான்காயிரம் கட்டுமரங்களும் நிர்வகிக்கும் வசதி, தற்போது உள்ளது. கடந்த ஆட்சி காலத்திலேயே நவீனமயமாக்கப்பட வேண்டிய துறைமுகம், குறைந்த நிதி ஒதுக்கீட்டால், 7 முறை டெண்டர் விட்டும் பணி  செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை. போதிய கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததால், சென்னை காசிமேடு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பிடிபடும் மீன்களை நேரடியாக, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இங்கு பிடிக்கப்படும் மீன்களை, கேரளாவுக்கு அனுப்பி அங்கிருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்தி, உலக தரத்துக்கு உயர்த்த 5 பஞ்சாயத்து சபை, விசைபடகு மீனவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை வைத்தன.இந்த கோரிக்கையின் அடிப்படையில் காசிமேடு துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி தற்போது துவங்கியுள்ளது. அதற்கு மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மெயின் வார்பு பகுதியில் மேற்கூரை அமைப்பது, படகுகள் பழுதுபார்ப்பு நிலையம் அமைப்பது, மீன்கள் ஏற்றுமதி செய்வதற்கு குளிர்சாதன கிடங்கு அமைப்பது, புதிதாக இரண்டு வார்புகள் கட்டப்பட உள்ளது. மீன்கள் மீன் பிடிக்க தேவையான பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்ய வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. மீன்வளத்துறை அலுவலர்களுக்கான அலுவலகம் கட்டப்பட உள்ளது. இந்தப் பணிகள் 18 மாதத்தில் முடிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த பணிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்காசிமேடு மீன் பிடித்து துறைமுகம் நவீனப்படுத்தினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும். காசிமேட்டில் இருந்தே வெளிநாட்டிற்கு மீன்களை ஏற்றுமதி செய்யலாம். இதனால் உலக தரத்திற்கு காசிமேடு மீன்பிடி துறைமுகம் மாறும். இதனை ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் ஆர்வம் கொண்டு விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாகும்….

The post ரூ.100 கோடியில் நவீனப்படுத்த நடவடிக்கை உலகத்தரத்தில் காசிமேடு துறைமுகம்: பணிகள் விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Kasimedu Port ,CHENNAI ,Kasimedu ,port ,Dinakaran ,
× RELATED திரைப்பட இயக்குனர் மோகன் ஜி-யை கைது செய்தது காவல்துறை