×

ராம்ஜி நகரில் வீடு வீடாக அதிரடி சோதனை: மோப்பநாய் உதவியுடன் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி, நவ.11: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் மது, கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்தநிலையில் ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று காலை 6 மணிக்கு ராம்ஜிநகர் பகுதிக்கு போலீஸ் வாகனங்களில் 60க்கும் மேற்பட்ட போலீசார் சென்றனர்.

பின்னர் வீடு வீடாக சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீடுகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டது. மேலும் வீடுகளில் உள்ள நபர்களிடம் யாராவது கஞ்சா விற்பனை செய்கிறார்களா என்று துருவி துருவி விசாரணை நடத்தினர். காலை 6 மணிக்கு துவங்கிய இந்த சோதனை காலை 8 மணி வரை நடந்தது. இந்த சோதனையில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ கஞ்சா சிக்கியது.

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேரை பிடித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை தினங்களில் ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாக தகவல் வந்ததால் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

The post ராம்ஜி நகரில் வீடு வீடாக அதிரடி சோதனை: மோப்பநாய் உதவியுடன் 4 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Nagar ,Trichy ,Kamini ,Trichy Municipal Police Commissioner ,Ramji Nagar ,
× RELATED குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை