×

ராதாபுரம் தொகுதியில் குடிநீர் தட்டுபாட்டை தீர்க்க ரூ.4.49 கோடியில் ‘நீரோ-65’ திட்டம்

ராதாபுரம், ஜூலை 2: ராதாபுரம் தொகுதியில் குடிநீர் தட்டுபாட்டை தீர்க்கும் வகையில் ரூ.4.49 கோடியில் ‘நீரோ 65’ திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். ராதாபுரம்‌ அருகே பட்டர்புரம்‌ பகுதியில்‌ குடிநீர் தட்டுபாட்டை தீர்க்க ரூ.4.49 கோடியில் ‘நீரோ-65’ என்கிற திட்டத்தில் போர்க்கால அடிப்படையில்‌ போர்வெல் அமைக்கும்‌ பணிகளை தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து பேசியதாவது: ராதாபுரம்‌ ஒன்றியத்திற்குட்பட்ட 27 ஊராட்சிகளில் குடிநீர்‌ தட்டுப்பாட்டினை போக்க 65 போர்வெல்கள் அமைத்து குடிநீர்‌ வழங்குவதற்கான மாபெரும்‌ திட்டம்‌ தொடங்கப்பட்டுள்ளது. 75 நாட்களுக்குள்‌ 65 போர்வெல்கள் அமைத்து, மின்‌ இணைப்பு வழங்கி, தண்ணீர்‌ இருப்புக்கு ஏற்றவாறு, மோட்டார்கள்‌ பொருத்தப்படுவதோடு, குடிநீர்‌ குழாய்‌ வழியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர்‌ கிடைக்க வழிசெய்யப்படவுள்ளது.

இத்திட்டம்‌ மக்களுக்காக மக்களே முன்னின்று செயல்படுத்தப்படவுள்ள திட்டமாகும்‌. இதற்காக ஊராட்சி நிதியிலிருந்து ரூ.1.74 கோடியும்‌, ஒன்றிய நிதியிலிருந்து ரூ.77 லட்சமும்‌, 15வது நிதிக்குழு மானியம்‌ கிராம ஊராட்சி வரையறுக்கப்பட்ட, வரையறுக்கப்படாத நிதியின்‌ கீழ்‌ ரூ.69 லட்சமும்‌, மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.1.29 கோடி என மொத்தம்‌ ரூ.4.49 கோடியில் ‘நீரோ 65’ திட்டப்பணிகள்‌ நிறைவேற்றப்படவுள்ளது. நெல்லை மாவட்டத்தில்‌ அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி குடிநீர்‌ கிடைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ ரூ.1028 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். விரைவில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு, ஒருவருக்கு 75 லிட்டர்‌ வீதம்‌ தாமிரபரணி குடிநீர்‌ கிடைப்பதற்கான பணிகள்‌ நடைபெறவுள்ளது. ஊராட்சி அளவிலான குடிநீர்‌ திட்டப்பணிகள்‌ 18 மாதங்களில்‌ முடிவுற்று ஊராட்சியிலுள்ள வீடுகளுக்கு தட்டுபாடின்றி தண்ணீர்‌ கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.ராதாபுரம்‌ பகுதியில்‌ உலக தரத்துடன்‌ விளையாட்டு மைதானம்‌ கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள்‌ விரைவில்‌ ஆரம்பிக்கப்படவுள்ளது. ராதாபுரத்தில்‌ ஒரு மினி விளையாட்டு அரங்கம்‌ கட்டப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில்‌, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்‌ சுரேஷ்‌, மாவட்ட ஊராட்சித்தலைவர்‌ வி.எஸ்‌.ஆர்‌.ஜெகதீஸ்‌, ராதாபுரம்‌ வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ பிளாரன்ஸ்‌ விமலா நடராஜன்‌, ராதாபுரம்‌ ஒன்றிய துணைத்தலைவர்‌ இளையபெருமாள்‌, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்‌ ஜாண்ஸ்‌ ரூபா, பாஸ்கர்‌, மின்வாரிய செயற்பொறியாளர்‌ வளனரசு, குடிநீர்‌ வடிகால்‌ வாரிய பொறியாளர்‌ கென்னடி, ஒன்றிய உறுப்பினர்‌ பரிமளம்‌, படையப்பா முருகன், இசக்கிபாபு, ௮னிதாபிரின்ஸ்‌, முருகேசன், பேபி முருகன், பரமேசுவரபுரம் கல்கண்டு கஸ்தூரிரங்கபுரம் வாழ்ந்த கணபதி, பாலன், ராதாபுரம் ராமையா, கோவிந்தராஜ், சதீஷ், திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி, மிட்டாதார்குளம் எஸ்தாக் ஹனிஸ்டன் உட்பட பலர்‌ பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் பொன்மீனாட்சி அரவிந்தன் செய்திருந்தார்.

The post ராதாபுரம் தொகுதியில் குடிநீர் தட்டுபாட்டை தீர்க்க ரூ.4.49 கோடியில் ‘நீரோ-65’ திட்டம் appeared first on Dinakaran.

Tags : Radhapuram ,Nero ,Dinakaran ,
× RELATED லாரி-பைக் மோதல்: காதல் ஜோடி பலி