×

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் மூளும் அபாயம் எதிரொலி ஜெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரிப்பு: நேற்று ஒரே நாளில் சவரன் ரூ.840 உயர்ந்தது வைரம் விலையும் 35 சதவீதம் எகிறியது

சென்னை: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் மூளும்
அபாயம் எதிரொலியாக தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 அதிகரித்தது. வைரம்
விலையும் எப்போதும் இல்லாத அளவுக்கு 35 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்தது.
தங்கம் விலை உயர்வால் திருமணம் உள்ளிட்ட விஷேசத்திற்கு நகை வாங்க
காத்திருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 4
மாதமாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு
வந்தது. சில சமயங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இதனால், நகை
வாங்குவோர் இடையே ஒரு குழப்பமான நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் யாரும்
எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து
உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. கடந்த 2ம் தேதி ஒரு சவரன் தங்கம்
ரூ.36,192க்கு விற்கப்பட்டது. 3ம் தேதி ஒரு சவரன் ரூ.36,256க்கும், 4ம்
தேதி ரூ.36,296, 5ம் தேதி ரூ.36,336, 7ம் தேதி ரூ.36,360, 8ம் தேதி
ரூ.36,464, 9ம் தேதி ரூ.36,672, 10ம் தேதி ரூ.36,808, 11ம் தேதி ரூ.36,880
என்றும் தொடர்ச்சியாக தங்கம் விலை அதிகரித்து வந்தது.நேற்று
முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,610க்கும், சவரன் ரூ.36,880க்கும்
விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்வை
சந்தித்தது. மாலையிலும் அதே விலை தான் நீடித்தது. அதாவது கிராமுக்கு ரூ.105
அதிகரித்து ஒரு கிராம் ரூ.4715க்கும், சவரனுக்கு ரூ.840 அதிகரித்து ஒரு
சவரன் ரூ.37,720க்கும் விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம்
விலை அதிரடியாக சவரன் ரூ.840 அதிகரித்தது. மேலும் சவரன் ரூ.38 ஆயிரத்தை
நெருங்கி வருகிறது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 10 நாட்களில் மட்டும் சவரன்
ரூ.1,528 அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை
வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த மாதத்தில் திருமணம்
உள்ளிட்ட அதிக விசேஷ தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில்
தொடர்ந்து விலையேற்றம், விசேஷத்திற்காக நகை வாங்க காத்திருப்பவர்கள்
கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை
என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும்.  அதனால், நேற்றைய
விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும்.  நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட்
தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது
தெரியவரும். இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கம்
தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர்
மூளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனுடைய தாக்கம் தங்கம் விலையில்
எதிரொலித்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதே மாதிரி பதற்றமான
சூழ்நிலை இருந்து வந்தால் இதே அளவில் தான் விலை நீடிக்கும். அதே நேரத்தில்
போர் வரும் சூழலில் தங்கம் விலை இன்னும் அதிகரிக்க கூடும். மேலும் போர்
வரக்கூடிய நிலை தான் அதிகம் உள்ளது என்பது நிபுணர்களின் கருத்து. அதனால்,
இன்னும் தங்கம் விலை உயரும். அது மட்டுமல்லாமல் வைரத்தின் விலையும் 35
சதவீதம் உயர்ந்துள்ளது. வைரம் விலை உயர்வு குறித்து சொல்ல போனால் இது
அபரீதமான விலை உயர்வு என்று தான் சொல்ல வேண்டும். 35 சதவீதம் உயர்வது இது
தான் முதல் முறையாகும். வழக்கமாக 5 சதவீதம் விலை உயரும். அதிப்பட்சமாக 10
சதவீதம் வரை தான் விலை உயரும். 35 சதவீதம் விலை உயர்வு என்பது வரலாற்றில்
முதல் முறை. இந்த விலையேற்றத்தால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பதில் சொல்ல
போகிறோம் என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.உக்ரைனில் நடப்பது என்ன?* ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர முயற்சி செய்து வருகிறது.* இது நடந்தால், தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா கருதுகிறது.* எனவே, உக்ரைனை தடுப்பதற்காக அதன் மீது போர் தொடுக்க, அந்நாட்டு எல்லையில் ரஷ்ய அதிபர் புடின் படைகளை குவித்துள்ளார்.* ரஷ்யாவின் இந்த மிரட்டலுக்கு அமெரிக்க அதிபர் பைடனும், நேட்டோ தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.* உக்ரைனை தாக்கினால் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என ரஷ்யாவை இவை எச்சரித்து வருகின்றன….

The post ரஷ்யா-உக்ரைன் இடையே போர் மூளும் அபாயம் எதிரொலி ஜெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரிப்பு: நேற்று ஒரே நாளில் சவரன் ரூ.840 உயர்ந்தது வைரம் விலையும் 35 சதவீதம் எகிறியது appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine ,Chennai ,Dinakaran ,
× RELATED நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால்...