×

ரசாயன உரத்தை தவிர்க்க ஆலோசனை

 

ஆண்டிபட்டி: காய்கறி சாகுபடியில் ரசாயன உரம், மருந்துகளை தவிர்க்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘‘மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இவைகளில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை வழி உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். நன்றாக மக்கிய தொழு உரம், மண்புழு உரம், மண்ணின் பௌதிக குணத்தை மேம்படுத்தி உற்பத்தி தன்மையை அதிகரித்து கொடுக்கும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இயற்கை முறையிலேயே அளிக்கும்.

மேலும் ஊட்டமேற்றிய தொழு உரம், குறைந்த அளவு ரசாயன உரம், இயற்கை உரம் கலந்த கலவையாக பயன்படுத்தலாம். காய்கறி விதைகள் விதைப்பதற்கு முன் டிரைகோடெர்மா விரிடி போன்ற உயிர் பாதுகாப்பு மருந்துகளை கலந்து விதை நேர்த்தி செய்வதால் நாற்றங்கால் நிலையில் ஏற்படும் நோய் தாக்குதலை தடுக்கலாம். பஞ்சகாவ்யா போன்ற திரவநிலை உரங்களை தெளிப்பதால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் பூ பூக்கும் தன்மை அதிகரிக்கும். வேப்பம் புண்ணாக்கு கரைசல், வேப்ப எண்ணை, வேப்பங்கொட்டை சாறு போன்ற வேம்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தலாம். எனவே விவசாயிகள் ரசாயன உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை வழி உரம் மற்றும் பயிர்பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும்.

The post ரசாயன உரத்தை தவிர்க்க ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Dinakaran ,
× RELATED தேனி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை